சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாட்டில் பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் செயல்பாடு
Posted On:
02 FEB 2024 8:08PM by PIB Chennai
தமிழ்நாட்டில் பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர் திரு பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர், சாகுபடி நிலத்தின் பரப்பளவை விரிவுபடுத்தும் வகையில் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டம் 2015-16-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் வறட்சிக்கு இலக்காகும் சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய பகுதிகளில் பாசன வசதியை ஏற்படுத்த தாமிரபரணி, கருமேனியாறு, நந்தியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 23,040 ஹெக்டர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கும் இத்திட்டம் நிறைவடையும் நிலையை அடைந்துள்ளது என்றும் இதுவரை 19,856 ஹெக்டர் நிலப்பரப்புக்கு பாசனவசதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.34.74 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
நிலத்தடி நீர் பாசனத் திட்டத்தின் கீழ் 166 கிணறுகளை அமைக்க ரூ.5.36 கோடியும் சிறுபாசனத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர் வாரி பராமரிக்க ரூ.107.22 கோடியும் மத்திய அரசால் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல் என்னும் பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் ஒரு பகுதித் திட்டம் 2022-23-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், தமிழ்நாட்டின் குறு பாசனத் திட்டத்தின் கீழ் 10.98 லட்சம் ஹெக்டேர் நிலபரப்பு பயனடையும் வகையில் மத்திய அரசு ரூ.2,365.24 கோடியை வழங்கியுள்ளது என அமைச்சர் கூறினார்.
-----
ANU/AD/PKV/KPG/KRS
(Release ID: 2002053)
Visitor Counter : 61