சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நீலகிரி மாவட்டம் பில்லிக்கரம்பையில் விவசாயக்கடன், தொழிற்கடன்களை பயனாளிகளுக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார்
Posted On:
28 DEC 2023 6:41PM by PIB Chennai
நீலகிரி மாவட்டம் பில்லிக்கரம்பை கிராமத்தில் நடந்த மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், பல்வேறு பயனாளிகளுக்கு விவசாயக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் பில்லிக்கரம்பை கிராமத்தில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொண்டு, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியை மக்களுக்கு செய்துவைத்தார்.
விழிப்புணர்வு வாகனத்தின் ஒளிபரப்பை பொதுமக்களுடன் சேர்ந்து கண்டுகளித்த அமைச்சர், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த காலண்டர்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய கடன் அட்டை, தொழில்கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நபார்டு வங்கி, முன்னோடி வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி மூலம் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட உடல் மற்றும் ரத்த பரிசோதனை மையம், நீலகிரி ஆதிவாசி நலவாழ்வு சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட அரிவாள் செல் ரத்த சோகை பரிசோதனை மையத்தை பார்வையிட்ட அமைச்சர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்திற்கான பயனாளிகளின் பதிவு எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன. நபார்டு வங்கி துணைப் பொதுமேலாளர் திரு திருமால் ராவ், மாவட்ட வேளாண் மைய அலுவலர் திரு மணிவாசகம் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.
********
AD/PKV/AG/KRS
(Release ID: 1991313)
Visitor Counter : 27