• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்தியாவை வல்லரசாக்கும் இளைஞர் சக்தி: இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைப்பு

Posted On: 01 DEC 2023 4:53PM by PIB Chennai

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வலிமை இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது என்றும் இந்தியாவை வல்லரசாக்கும் பயணத்தில் நாட்டின் இளைஞர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ எம் ஜெயின் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில்  இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான இளைஞர் கலைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை 2047-ம் ஆண்டு எட்டுவது நமது லட்சியமாகும். இந்தப் பயணத்தில் நாட்டில் உள்ள உங்களைப் போன்று இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்று  அமைச்சர் டாக்டர் எல் முருகன் மேலும் கூறினார்.

இளைஞர்களின் பங்களிப்போடு நாடு அமிர்த காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளது என்றும் அனைத்துத் துறைகளிலும் விரைவாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இளைய இந்தியா, புதிய சிந்தனையுடன், புதிய இந்தியாவை 2047-ல் கட்டமைக்கும் என்று அவர் கூறினார்.

தொடக்கக் கல்வி குழந்தைகளின் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பதைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார். மேலும், புதிய கல்விக் கொள்கையால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு நமது இளைஞர்கள் உலக அளவில் சிறந்த போட்டியாளர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, அனைத்துத் துறைகளிலும் இறக்குமதியை சார்ந்திருந்த  நாடு, தற்போது அனைத்துத் துறைகளிலும் ஏற்றுமதியில் சாதனைப் படைத்து வருகிறது என்றார்.  மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களால் இந்தியாவை தற்போது உலக நாடுகள் உற்று நோக்குகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கிராமப்பகுதிகளில் புதைந்திருந்த திறமைகளை வெளிக்கொண்டு  வந்திருப்பதாகவும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த  இளைஞர்கள், தேசிய அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப்  போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா புதிய சாதனை படைத்ததை டாக்டர் எல் முருகன்  நினைவுகூர்ந்தார்.

எனது மண், எனது தேசம் இயக்கத்தின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியால்  தொடங்கிவைக்கப்பட்ட எனது பாரதம் (மை பாரத்) தளத்தில் இணைந்து, இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் அறிவியல் மற்றும் விண்வெளித்துறையின் வளர்ச்சிக்கு சான்றாக அமைந்த சந்திரயான் – 3 மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு மிகப் பெரிய சாதனையைப் படைத்தது என்று  அவர் கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் ஒரு மிகப் பெரிய நிகழ்வாக   பல்வேறு நகரங்களில்  கடந்த ஓராண்டாக நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜி-20 தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு உலக நாடுகள் முழுமையாக ஆதரவு அளித்திருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இளைஞர் 20 (ஒய்20) எனப்படும் நிகழ்வுகளில் நாடு முழுவதும் 26 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர் என்று டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாட்டிலும் 220-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே நேரடியாக எடுத்து செல்கின்றன என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு திட்டங்களில் விடுபட்ட பயனாளிகளை இணைக்கும் பணி இந்த யாத்திரையின் போது நடைபெற்று வருகிறது என்றும் இந்தப் பயணத்தை வெற்றி பெறச் செய்வதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். எனது மண் எனது தேசம் போன்ற நிகழ்வுகளைப் பெருமளவு வெற்றியடைய செய்ததில்  நேரு யுவகேந்திரா இளைஞர்கள் முக்கியப் பங்கு வகித்ததாக அவர் கூறினார்.

அதேபோல் இந்த யாத்திரையிலும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நாடு புதிய பாதையில் புதிய உத்வேகத்துடன் பயணிப்பதாக கூறிய அவர் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற உறுதிப்பாட்டுடன் தேசத்தின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் எல் முருகன் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணாதுரை, நேரு யுவகேந்திரா மிகப்பெரிய இளைஞர் அமைப்பு என்றும் 1.81 லட்சம் கிளைகளுடன் 36 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசின் மக்கள் தொடர்பகம் சார்பில்  நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பயணத்தில் இவர்கள் சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர்  திரு கே குன்அகமது, தேசிய மாணவர் படையின் துணைத் தலைமை இயக்குநர் திரு ஏ கே ரஸ்தோகி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் மண்டல இயக்குநர் திரு எஸ். சாய்ராம், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர்“ மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் திருமதி  வசந்தி ராஜேந்திரன், ஏ. எம். ஜெயின் கல்லூரியின் முதல்வர் டாக்டர் என் வெங்கடரமணன் மற்றும் செயலாளர் உதன் குமார் சோர்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

*****

AD/SMB/RS/KPG

 



(Release ID: 1981577) Visitor Counter : 161


Link mygov.in