சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரியில் பழங்குடியின மக்களுடன் மத்திய அமைச்சர் எல் முருகன் கலந்துரையாடல்
Posted On:
18 NOV 2023 3:10PM by PIB Chennai
வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.25 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பயனடைந்துள்ளனர் என்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் பழங்குடியினருக்கு சுமார் ஒன்றரை கோடி கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பழங்குடியின மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் டாக்டர் எல் முருகன் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 50 லட்சத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பயனடைந்துள்ளனர். தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கம் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் இதுவரை 58 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.
பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 3.15 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மாணவர்களுக்கு ரூபாய் 17000 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 111 பழங்குடியின மாணவர்கள் அயல் நாடுகளில் கல்வி பயில 24 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில்வதற்காக ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன. 401 ஏகலைவா பள்ளிகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில்வதாக மேலும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக தனது உரையில் புதுச்சேரி மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
நிகழ்ச்சியில் சட்டமன்றத் தலைவர் திரு ஆர். செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் திரு எஸ். செல்வகணபதி, உள்துறை அமைச்சர் திரு நமச்சிவாயம்,குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சர் திரு சாய் சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பழங்குடியின மக்கள் பலரும் அளித்த கோரிக்கை மனுக்களை அமைச்சர் டாக்டர் எல் முருகன் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
***
AD/DL
(Release ID: 1977830)
Visitor Counter : 34