சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க மாணவர்கள் முன்வர வேண்டும் - திருச்சி மாநகரக் காவல் ஆணையர் திருமதி என் காமினி வலியுறுத்தல்
Posted On:
06 OCT 2023 4:35PM by PIB Chennai
போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என திருச்சி மாநகரக் காவல் ஆணையர் திருமதி என். காமினி வலியுறுத்தினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் 'போதைப் பொருள் இல்லாத இந்தியா & சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள்' குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியை திருச்சி மாநகரக் காவல் ஆணையர் திருமதி என் காமினி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக மாணவர்கள் முன்வர வேண்டும். காரணம் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கம் ஏற்படுகிறது. அதை நாம் முழுமையாகத் தடுக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்குத் தெரிய வந்தால் உடனடியாக காவல் துறை அல்லது பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் . அதோடு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீங்கு மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கைப்பிரதியை அவர் வெளியிட்டார். அதோடு போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழியை மாணவர்களுடன் எடுத்துக் கொண்டதோடு, கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா, மாணவர்கள் நலத்துறைத் தலைவர் முனைவர் கார்வேம்பு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு பி. அருண் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய மக்கள் தொடர்பகத்தின் திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே. தேவி பத்மநாபன் வரவேற்பு ஆற்றினார். தஞ்சாவூர் கள விளம்பர அலுவலர் திரு கே ஆனந்த பிரபு நன்றியுரை ஆற்றினார்.
-----------
SM/AD/KV
(Release ID: 1965034)
Visitor Counter : 108