• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கோவையில் பெற்றுக்கொண்டார்


தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு

Posted On: 23 SEP 2023 6:00PM by PIB Chennai

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஈரோடு மாவட்ட இளையோர்  நலஅதிகாரி திரு ஆசிஷ் சஞ்சய் சேட் மற்றும் தேசிய இளைஞர் அமைப்பின் தன்னார்வளர்களிடம் இருந்து, மண் கலசங்களை அமைச்சர் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் இதுவரை 7530 கிராமங்கள் பங்கேற்றுள்ளன. இது மொத்த கிராமங்களில் 40.42 சதவீதம் ஆகும். இதில் கலந்து கொண்ட குடும்பங்கள் 1,68,067. பங்கேற்ற மக்கள் 2,29,562 பேர்.

1857 முதல் 1947 வரை, 90 ஆண்டுகள், சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் நடைபெற்ற போது, எண்ணற்ற அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த நோக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்.

நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், என் மண் எனது தேசம் ('மேரா மட்டி மேரா தேஷ்') இயக்கம் தொடங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி, தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் அறிவித்தார். இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண்நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் தில்லிக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, என் மண் எனது தேசம்’  இயக்கத்தின் கீழ் அமிர்தக் கலச யாத்திரையை புதுதில்லியில் இம்மாதம் 2ந்தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய சட்டம் மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து -கொண்டனர்.

 

கையில் மண்ணுடன் உறுதிமொழி எடுத்து, தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம். ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும், குடிமகனும், குழந்தையும் சிறந்த இந்தியாவை உருவாக்கும் எண்ணத்துடன் உணர்வுபூர்வமாக இணைய வேண்டும் என்பதே ‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் நோக்கம் ஆகும். செப்டம்பர் 1 முதல் 30 வரை, ஒவ்வொரு வீடு், பகுதி, கிராமம் என பல பகுதிகளில் இருந்தும், அக்டோபர் 1 முதல் 13 வரை வட்டாரத்திலும், பின்னர் அக்டோபர் 22 முதல் 27 வரை மாநில அளவிலும்  மண் சேகரிக்கப்படவுள்ளது. 

இறுதியாக அக்டோபர் 28 முதல் 30 வரை, நாடு முழுவதும் சேகரிக்கப்படும் 7,500 கலசங்கள், நாட்டின் தலைநகரான புதுதில்லியை அடையும். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த அமிர்தக் கலசத்திலிருந்து மண்ணை தில்லியில் நமது மாவீரர்களின் நினைவாக உருவாக்கப்படும் பூங்காவில் வைப்பார். இது அமிர்த காலத்தில் இந்தியாவை சிறந்ததாக மாற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் நினைவூட்டும் நிகழ்ச்சியாக அமையும்.

*** 

SM/AP/PKV/DL



(Release ID: 1959921) Visitor Counter : 156


Link mygov.in