சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வளர்ச்சி மிக்க இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ஏ. நாராயணசாமி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் ஆவடி மற்றும் சிவகங்கையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாக்களில் 547 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன
Posted On:
28 AUG 2023 2:58PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்திலும் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாவை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேலைவாய்ப்பு திருவிழாக்கள் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நாடு முழுவதும் இன்று 45 இடங்களில் வேலை வாய்ப்பு மேளாக்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிகத்தல் துறை இணையமைச்சர் திரு. ஏ. நாராயணசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 341 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதேபோல சிவகங்கையிலுள்ள இந்தோ திபெத் எல்லைக்காவல் படையின் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட்லஜே 206 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுதக் காவல் படையின் பல்வேறு பிரிவுகளான மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, எல்லைக் காவல் படை, இந்தோ திபெத் காவல் படை, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், போதைப்பொருள் தடுப்பு பணியகம் (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறை போன்ற பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் இதர துறைகளிலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் இந்நிகழ்வில் தங்களது பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக காணொலிக் காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் நட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதாரம், வேளாண்மைத்துறை, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நாடு சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்தார். அண்மையில் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தெந்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்திருப்பது உலக நாடுகளின் கவத்தை இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ளதா தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களை நாட்டின் வளர்ச்சியில் சிறப்பாக பங்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சென்னையை அடுத்துள்ள ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு நாராயணசாமி, அனைத்து துறைகளிலும் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
சிவகங்கையில் உள்ள இந்தோ திபெத் எல்லைக்காவல் படையின் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட்லஜே பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார். பத்தொன்பது வயதிருக்கும் இளைஞர்களுக்கும் பணி நியமன ஆணைகள் இந்த வேலைவாய்ப்பு திருவிழாக்களில் வழங்கப்பட்டிருப்பது இந்நாட்டின் எதிர்காலத்தில் அவர்களின் பங்கை உறுதிசெய்கிறது என்று தெரிவித்தார்.
தொலைநோக்கு சிந்தனையுடன் நமது பிரதமர் செயல்பட்டு வருவதுடன், பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் இதன் விளைவாக, நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டை 2047ஆம் ஆண்டில் கொண்டாடும்போது, வேளாண்மை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலக தரவரிசைகளில் இந்தியா முதன்மை நாடாக விளங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பணி நியமன ஆணைகளைப் பெற்ற இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் சிஆர்பிஎஃப், இந்தோ திபெத் எல்லைக்காவல் படையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
***
AP/AD/SG/KPG
(Release ID: 1952903)
Visitor Counter : 125