• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

Posted On: 15 JUL 2023 11:30AM by PIB Chennai

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற உதகை மலை ரயில் வண்டியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் புதிய ரயில்வண்டியின் பெட்டிகள் அழகியலோடு  சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டிருக்கும்.  புதிய வடிவமைப்பிலான  பெட்டிகளில் அகலமான கதவுகள் மற்றும் பெரிய ஜன்னல்கள் மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதி ஆகியவை பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும்.. பெட்டிகளில் 110வோல்ட்  எல்இடி  விளக்கு மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுகள் உள்ளன.

அதோடு ரயில் நிலையத்தின் நடைமேம்பாலம் அருகே ரூ. 1.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முன்பதிவு அலுவலகத்தையும் வாகனங்கள் நிறுத்துமிடத்தையும்  அமைச்சர் திறந்து வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு கவுன்டர் உட்பட 3 கவுன்டர்கள் இதில் உள்ளன. 2 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இவற்றின் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளைப் பயணிகள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு, குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் இந்த மலை ரயில் வண்டியை இந்திய ரயில்வே துறையினர் புதிய வடிவில் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். புதிய வடிவில் உருவாக்கப்பட்டு இன்று துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ்ந்தனர்.

 

இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பி.கே.சின்கா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

***

AP/DL



(Release ID: 1939689) Visitor Counter : 100


Link mygov.in