சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் நாளைய யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள்
Posted On:
20 JUN 2023 8:24PM by PIB Chennai
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பொருள்படக்கூடிய வசுதைவ குடும்பகம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி அமெரிக்காவில் உள்ள ஐநா சபை மன்றத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட உள்ளார். ஜபல்பூரில் குடியரசுத் துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் தலைமையில் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம் மிகச் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவை சார்பில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும். நாளை (21-06-2023) அந்தமான் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச யோகா தின விழாவில் மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் பங்கேற்கிறார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் யோகா தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னையில் உள்ள முட்டுக்காட்டிற்கு அருகே உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் நாளை 15 த்திற்கும் மேற்பட்ட யோகா செய்முறை நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. இங்கு மத்திய மக்கள் தொடர்பகத்தின் இசை நாடக பிரிவு கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
திருச்சியில் நாளை சின்மயா வித்யாலயா பள்ளியில் யோகா செய்முறை விளக்கமும், யோகாவின் நலன் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன. முன்னதாக இன்று யோகாவின் சிறப்புகளை வலியுறுத்தும் வகையில், மாணவ, மாணவியர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
கோவையில் கற்பகம் அகடாமி கல்வி நிறுவனத்தில் சுமார் ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொள்ளும் யோகா பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
கொடைகானலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் யோகா குறித்த விளக்க உரையும், செய்முறை பயிற்சியும் நாளை நடைபெறுகிறது. நாளை மறுநாள் மாணவ, மாணவியர் கலந்து கொள்ளும் யோகா விழிப்புணர்வு பேரணியும் நடைபெற உள்ளது.
கோவில்பட்டியில் நாளை மறுநாள் அன்னைதெரசா பல்கலைக்கழக மாணவியர் யோகா செய்முறை விளக்கத்தை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் யோகாவினால் ஏற்படக்கூடிய நலன்கள் குறித்த சொற்பொழிவும் நிகழ்த்தப்படும்.
புதுச்சேரி மக்கள் தொடர்பகத்தின் சார்பில், விழுப்புரம் அருகே உள்ள வானூரில் யோகா விழிப்புணர்வு பேரணி நாளை நடைபெற உள்ளது. இன்று அரசு பள்ளிகளில் யோகா செய்முறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகமும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கிளை அலுவலகங்களும் இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
SM/ MA/ KRS
***
(Release ID: 1933767)
Visitor Counter : 92