சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சர்வதேச விசயங்களில் இந்தியாவின் முடிவை ஒட்டுமொத்த உலகமும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் திருச்சியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் தெரிவித்தார்
நாடு முழுவதும் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன
Posted On:
13 JUN 2023 4:11PM by PIB Chennai
“கடந்த 9 ஆண்டுகளில் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சர்வதேச விசயங்களில் இந்தியாவின் முடிவை ஒட்டுமொத்த உலகமும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது”, என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார். திருச்சியில் நடைபெற்ற 6-வது வேலைவாய்ப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுகிறது என்று கூறினார். இந்த வேலைவாய்ப்பு விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இன்று 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திருச்சி விழாவில், இந்திய ரயில்வே, அஞ்சல் துறை, பாதுகாப்புத்துறை, மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெருந்தொற்றுக் காலத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தங்களை சார்ந்து இருக்கும் என்று மற்ற உலக நாடுகள் எண்ணிய வேளையில், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கும் வழங்கிய பிரதமரின் செயல் பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார். பல்வேறு நாடுகள் பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டுவரப் போராடிவரும் நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சீரிய நடவடிக்கைகளால் இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளி, ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யா - உக்ரைன் போரின் போது இருநாட்டுத் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் அங்கு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 23 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கும் பிரதமர் முக்கிய காரணியாகத் திகழ்ந்தார் என்றார். சர்வதேச அளவில் இந்திய இளைஞர்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாகவும், தாய்மொழி வழியில் அவர்கள் கல்வி பெற்று பயனடையவும், புத்தாக்கம், தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேசிய கல்விக் கொள்கை 2020 கொண்டுவரப்பட்டதை அவர் மேற்கோள் காட்டினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு நாட்டில் வெறும் 500 புத்தொழில் நிறுவனங்களே செயல்பட்டதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக ஒரு லட்சம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் வாயிலாக உலக அளவில் புத்தொழில் சூழலுக்கு ஏற்ற மூன்றாவது சிறந்த இடமாக இந்தியா திகழ்வதாகவும் அமைச்சர் பெருமிதம் கொண்டார். அதேபோல சுதந்திரம் பெற்றது முதல் 2014-ஆம் ஆண்டு வரை நாட்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் மேலும் 27 நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் எல். முருகன் கூறினார்.
சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கீழ் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்காக 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தி வருவதாக அவர் கூறினார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி, கோவை, ஓசூர் போன்ற நகரங்களில் பாதுகாப்புத் தொழில் வழித்தடம் அமையவிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 2047-ஆம் ஆண்டில் விடுதலையின் நூற்றாண்டில் இந்தியா வல்லரசாகத் திகழ்வதற்கு ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்ற உணர்வுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் திரு ரியாசுல் ஹக், திருச்சி கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் திரு எஸ்.டி.ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் துறை, பாதுகாப்புத்துறை, ரயில்வே துறை மற்றும் பல அரசுத்துறைகள், அமைச்சகங்களில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 646 பேர் பணிநியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர். இதில் 343 பேர் நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்டு நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.
***
AP/AD/BR/GK
(Release ID: 1931981)
Visitor Counter : 257