சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நேர்முக மற்றும் மறைமுக வரி வசூலை விரிவுபடுத்தச் செய்ய வேண்டியதின் அவசியத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்
Posted On:
18 DEC 2022 7:33PM by PIB Chennai
நம் நாட்டில் நேர்முக மற்றும் மறைமுக வரி வசூலை விரிவுபடுத்தச் செய்ய வேண்டியதின் அவசியத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணாநகரில் ரூ 560 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மத்திய வருவாய்த்துறை குடியிருப்பு வளாகத்தை இன்று திறந்து வைத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தற்போது முறையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதன் விளைவாக நம் நாட்டின் மேம்பாட்டிற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்கள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நேர்முக மற்றும் மறைமுக வரி வசூல் சீரான முறையில் நடைபெற துறை சார்ந்த அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
“அரசு அதிகாரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து நம் நாட்டுக்காக அவர்களது சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு வழி வகை செய்யும் என்றும் அவர் கூறினார்.
இந்த மத்திய வருவாய்த்துறை குடியிருப்பு வளாகம் தமிழ் மாதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மங்களகரமான மார்கழி மாதத்தில் திறந்து வைக்கப்பட்டு இருப்பது சிறப்பானது ஆகும் என்று கூறிய மத்திய நிதியமைச்சர், கிருஷ்ண பரமாத்மாவிற்கு மிகவும் பிடித்தமான மாதம் மார்கழி என்றார். பாரம்பரியமிக்க, தொன்மையான தமிழ் சங்ககாலத்தை நினைவு கூறும் வகையில் இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு கட்டடத்திற்கும் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்ற பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும் என்றார்.
பின்னணி
வருமான வரித்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை, சென்னையும் இணைந்து ரூ 560 கோடி செலவில் ‘நந்தவனம்’ என்ற பெயரில் மத்திய வருவாய்த்துறை குடியிருப்பு வளாகம் சென்னையில் அண்ணாநகர் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பிரிவு ஆ மற்றும் இ பணியாளர்களுக்காக பத்து கோபுரங்களை கட்டி உள்ளன.
குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்ற பூக்களின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றின் பெயர்களே கோபுரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. அவை "கொன்றை", "காந்தள்", "காஞ்சி", "வாகை", "அனிச்சம்", "செண்பகம்", "அகில்", "மௌவல்", "தாமரை" மற்றும் "வேங்கை".
புதிதாக கட்டப்பட்டுள்ள இக்குடியிருப்புகளையும் மற்றும் நந்தவனம் வளாகத்தினுள் "பைம்பொழில்" என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள நுண் வனத்தையும் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
இக்கோபுரங்கள் சுரங்க வடிவென்ற நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளன. இந்த செயல்பாடு, சுவர்கள் மற்றும் அடுக்குகளை வார்ப்பதை எளிதாக்கும். மேலும், இது கான்கிரீட் கட்டுமானத்தின் துல்லியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பூகம்பத்தை எதிர்க்கும் திறன் கொண்ட சுமை தாங்கும் கட்டமைப்புகளை உருவாக்குகிறது. இது ஒலி பரிமாற்றத்தின் முக்கியமான சிக்கலுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது. இது 50 டெசிபல் ஒலியைக் குறைக்கும்.
சுரங்க வடிவத் தொழில்நுட்பம், பொதுவான இடங்களைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம், விரைவான கட்டுமானத்தில், அதிக தரைத்தளம் கிடைக்க வழி செய்கிறது. இத்தொழில்நுட்பம் மூலம் வெப்ப சுமை குறைவதால் மின் நுகர்வும் குறைகிறது. இந்த ஒற்றைக்கல் தொழில் நுட்பம் மிகக்குறைவான பூச்சு கொண்டு அடைப்பற்ற மேற்பரப்பிற்கு அடிகோலுகிறது.
இந்த திட்டம் ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமை திட்டத்தின் கீழ் 4 நட்சத்திரம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தோன்றிய கொவிட் தொற்றுநோயை கருத்தில் கொண்டு, வீட்டின் உள்ளும் வெளியும் ஆரோக்கியமான காற்றோட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டிடமானது சூரிய பாதை பகுப்பாய்வு மற்றும் பிரதான காற்றின் திசையால் வடிவமைக்கப்பட்டு, பகலில் 75 சதவிகிதம் இயற்கையாகவே வெளிச்சம் பெற ஏதுவாகிறது. குடியிருப்பாளர்களின் நல்வாழ்வுக்காக, உட்புறமும் வெளிப்புறமும் சிறப்பாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலையான கட்டுமானப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக பயன்படுத்தப்பட்டுள்ளன. திறமையான கழிவு மேலாண்மைக்கான பொருத்தமான உள்கட்டமைப்பு மற்றும் 35 சதவிகித ஆற்றல் சேமிப்பு, 5 நட்சத்திர மதிப்பிடப்பட்ட மின் பொருத்துதல்கள் மற்றும் சாதனங்கள், நிகர பூஜ்ஜிய கார்பன் கட்டிடத்தின் இட வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு தடையற்ற சூழலை உருவாக்கும் வகையில் மின் தூக்கி மற்றும் மேற்பரப்பு வாகன நிறுத்தம் அமைத்து இத்திட்டம் இந்திய விதிமுறைகளுக்கு இணங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோபுரங்கள் தேசிய கட்டிடக் குறியீடு மற்றும் உள்ளூர் துணை விதிகளுக்கு முழுமையாக உட்பட்டு கட்டப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பணிபுரியும், மத்திய வருவாயின் இரு துறையின் பணியாளர்களின் குடியிருப்புத் தேவையை முழுதும் பூர்த்தி செய்யும் வகையிலும், அவர்கள் பெரும் மன உறுதியும் மன நிம்மதியும் பெறும் வகையிலும், இனிமையான சூழலில், இத்திட்டம் மத்திய நிதி அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
**************
SM/GS/DL
(Release ID: 1884606)
Visitor Counter : 158