ஓடிடி தளங்கள் படைப்பாற்றலுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும், பல்வேறு மொழிகளில் உருவாகும் கதைகளைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளவும், புதிய கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் உதவுகின்றன என்றும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் சிறந்த இணையத் தொடர் விருதுக்கான நடுவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விருதுக்கான நடுவர் குழுவில் தலைவர் திரு ஜே.டி. மஜேத்தியா, உறுப்பினர்கள் திரு கிருஷ்ணா ஹெப்பாலே, திரு ஷைலேந்திர ஜா, திருமதி கரிமா வஹால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இணைய வசதியும் ஓடிடி தளங்களும் வளர்ந்ததால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் உருவாகும் படைப்புகளைப் பார்வையாளர்கள் எளிதாகப் பார்க்க முடிகிறது என்று நடுவர் குழுத் தலைவர் திரு ஜே.டி. மஜேத்தியா தெரிவித்தார். இணையத் தொடர்களை மதிப்பிடும்போது கதை, கதாபாத்திர அமைப்பு, நடிப்பு, இயக்கம், பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டதாகவும் கூறினார். கொவிட் பெருந்தொற்று காலம் ஓடிடி துறையின் வளர்ச்சிக்கு அதிக ஊக்கம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இணையத் தொடர்களில் கதை எழுதும் தரம் உயர்ந்து வருவதாகத் திரு கிருஷ்ணா ஹெப்பாலே தெரிவித்தார்.
பாரம்பரியத் திரைப்படத் துறையில் வாய்ப்புக் கிடைக்காத புதிய படைப்பாளர்களுக்கும் ஓடிடி தளங்கள் வாய்ப்பளிப்பதாகத் திரு ஷைலேந்திர ஜா தெரிவித்தார். வசன வரிகள் மூலம் மொழித் தடைகள் குறைந்து, வெவ்வேறு மொழிகளில் உருவாகும் கதைகளைப் பார்வையாளர்கள் ரசிக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணையத் தொடர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாகத் திருமதி கரிமா வஹால் தெரிவித்தார். புத்தகம் படிப்பதைப் போன்ற நெருக்கமான அனுபவத்தை இத்தொடர்கள் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். பல்வேறு வகைக் கதைகள், ஒரே நேரத்தில் பல அத்தியாயங்களைப் பார்க்கும் வசதி ஆகியவை புதிய கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
ஓடிடி தளங்கள் புதிய முயற்சிகளையும், பல்வேறு கதைகளையும் ஊக்குவித்து இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு உதவுவதாக நடுவர் குழுவினர் தெரிவித்தனர். இந்தச் செய்தியாளர் சந்திப்பை திரு மகேஷ் குமார் ஒருங்கிணைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342996®=48&lang=2
****
SK/PLM/RJ