இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 2:01PM by PIB Chennai
புதுதில்லி ஓக்லாவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையின் புதிய உயர் சிறப்பு மருத்துவப் பிரிவை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (27.11.2026) திறந்து வைத்தார். மருத்துவமனையின் 2026-ம் ஆண்டு மலரையும் அவர் வெளியிட்டார். புதிய கட்டடம் அமைக்க உதவியவர்களையும் அவர் பாராட்டினார்.
சாதி, மதம், பொருளாதார நிலை என எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனையின் சேவையை அவர் பாராட்டினார். புதிய மருத்துவப் பிரிவு நவீன சிகிச்சையை குறைந்த செலவில், வழங்கும் என்று அவர் கூறினார்.
புற்றுநோய் சிகிச்சையையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மருத்துவ ஆராய்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார். அவை குறிப்பிட்ட நாடுகள் அல்லது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
புற்றுநோய் மருத்துவ நிறுவனங்கள் ஆராய்ச்சி, அறிவு, சிறந்த சிகிச்சை முறைகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள பொதுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆகியவை நலிவடைந்த குடும்பங்களின் மருத்துவமனைச் செலவைக் குறைக்க உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் ஆகியவை அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க கிராமங்கள், சிறிய நகரங்கள் உட்பட அனைவருக்கும் வளர்ச்சியின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்றார். மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, திறமை, மனிதநேயம் ஆகியவையே ஒரு மருத்துவமனையின் உண்மையான வலிமை என்றும் அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க ஆரோக்கியமே அடிப்படை என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342469®=3&lang=1
***
SS/PLM/SH