57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, முதலாவது ‘பேஜ் சே பிட்ச் தக்’ திரைக்கதைப் பயிலரங்கின் வெற்றியாளர்களை பிரசார் பாரதி இன்று அறிவித்துள்ளது. பிரசார் பாரதி தலைவர் திரு பிரசூன் ஜோஷியின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இம்முன்முயற்சி, வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பத்து இந்திய மொழிகளில் தங்களது படைப்புகளை வெளிப்படுத்துவதற்கான வருடாந்திர தேசியத் தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,000 திரைக்கதைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ‘மிர்ச்சி கேக்’ திரைக்கதைக்காக அவிஷேஷ் ஜா முதல் பரிசையும் (ரூ. 5 லட்சம்), ‘சம்ஹார்’ திரைக்கதைக்காக சத்ய வியாஸ் இரண்டாம் பரிசையும் (ரூ. 3 லட்சம்), ‘சரத் பூர்ணிமா’ திரைக்கதைக்காக ஜிதேஷ் தாக்கூர் மூன்றாம் பரிசையும் (ரூ. 2 லட்சம்) வென்றுள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு பிரிதுல் குமார், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு தீரஜ் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்பாற்றலைக் கண்டறிந்து ஊக்குவிப்பது அவசியம் என்றும், வலுவான கதையும் திரைக்கதையுமே வெற்றிகரமான திரைப்பட உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைகின்றன என்றும் திரு பிரிதுல் குமார் வலியுறுத்தினார். முன்னதாக, தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் திருமதி ரீனா சோனோவால் கௌலி வரவேற்புரையாற்றினார். நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற இப்பயிலரங்கம், புதிய எழுத்தாளர்களுக்கும் திரையுலகிற்கும் இடையேயான பாலமாக அமைந்து, சிறந்த திரைக்கதைகள் திரைப்படங்களாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340814®=3&lang=1
****
SK/SE/SH