குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உயர்கல்வித் துறையில் கடந்த 12 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது : குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 2:23PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (21.11.2026) கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, உலக அளவில் இந்தியாவின் மதிப்பும் செல்வாக்கும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். கல்வி என்பது நாடுகள், கலாசாரங்கள், சமூகங்களை இணைக்கும் வலிமையான பாலமாக அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சிம்பயோசிஸ் பல்கலைக்கழகத்தில் 85 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வது, இந்தியாவின் சர்வதேசக் கல்வித் தரத்தை வெளிப்படுத்துவதாக அவர் பாராட்டினார்.

இந்தியாவின் உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் அவர் எடுத்துரைத்தார். 2014-15-ம் ஆண்டில் 760-ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 1,400-ஐக் கடந்துள்ளது என்று அவர் கூறினார். ஐஐடி கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 16-லிருந்து 23-ஆகவும், ஐஐஎம் நிறுவனங்களின் எண்ணிக்கை 13-லிருந்து 22-ஆகவும், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 8-லிருந்து 23-ஆகவும் உயர்ந்துள்ளதை அவர் எடுத்துரைத்தார். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 3.4 கோடியிலிருந்து 4.5 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பெண்களின் கல்வி முன்னேற்றம் நாட்டின் உண்மையான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றலைத் தொடர வேண்டும் என்றும் நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றுடன் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339481&reg=3&lang=1

(Release ID: 2339481)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339504) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Malayalam