மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத்துறை நிலங்களைப் பாதுகாக்க நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 2:52PM by PIB Chennai

பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலங்களைச் சிறப்பாக நிர்வகிக்கவும், பாதுகாக்கவும் நவீனத் தொழில்நுட்பம், டிஜிட்டல் நடைமுறைகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை நில நிர்வாக அமைப்பின் நூற்றாண்டு விழாவில் அவர் உரையாற்றினார். அப்போது, ராணுவத்துக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், நில ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், ராணுவத்தின் தேவைகளுக்குச் சரியான நேரத்தில் நிலங்களை வழங்குதல் ஆகியவை முக்கியப் பணிகள் என்று அவர் கூறினார்.

நாட்டில் 17 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலங்களை நிர்வகிக்கும் இந்த அமைப்பு, நில ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். புதிய தொழில்நுட்பங்கள் நிர்வாகப் பணிகளை மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நில ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளின்போது பொதுமக்களுக்குத் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

ராணுவக் குடியிருப்புப் பகுதிகளின் வரலாற்றுச் சிறப்பு, பசுமைச் சூழல், காடுகள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அப்பகுதி மக்களுக்கான பள்ளிகள், மருத்துவ வசதிகள், கணினிப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நீர் சேமிப்பு, மறுசுழற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளையும் அவர் பாராட்டினார்.

நூறு ஆண்டுகால அனுபவத்தையும் இளம் பணியாளர்களின் தொழில்நுட்பத் திறனையும் இணைத்துச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். புதுமை, வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் நாட்டின் பாதுகாப்பையும் ராணுவத்தின் செயல்திறனையும் மேம்படுத்த வேண்டும் என திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338993&reg=3&lang=1

(Release ID: 2338993)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339299) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada