இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:23PM by PIB Chennai
டோக்கியோவில் 2026 நவம்பர் 19 அன்று நடைபெற்ற நான்காவது இந்தியா-ஜப்பான் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு மோடெகி தோஷிமிட்சு, ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு கொய்சுமி ஷின்ஜிரோ ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அதிகரித்து வரும் சிக்கலான, நிச்சயமற்ற சர்வதேச சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உத்திசார் ஒருங்கிணைப்பு, நம்பிக்கையை அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்கள். தற்போதைய புவிசார் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய கூட்டாண்மையின் கீழ் நெருக்கமான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள். உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளாகவும், முக்கியப் பொருளாதாரங்களாகவும் திகழும் இரு நாடுகளும், தடையற்ற, வெளிப்படையான, சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பராமரித்து வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள். தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளுக்கு மதிப்பளித்தல், மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் அவர்கள் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். தற்போதைய நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் அனைத்து நாடுகளும் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற இருநாட்டின் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திற்குப் பிறகு இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு அமைச்சர்கள் திருப்தி தெரிவித்தனர். 2025 ஆகஸ்ட், 2026 ஜூலை-ல் நடைபெற்ற 15-வது, 16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடுகளின் முடிவுகளை அவர்கள் வரவேற்றனர். இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா போன்ற பிராந்திய விவகாரங்கள் குறித்தும், ஐ நா சீர்திருத்தம், விண்வெளி, கடல்சார் களங்கள், பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், ஆர்க்டிக் உள்ளிட்ட பலதரப்பு விவகாரங்கள் குறித்தும், கொள்கைத் திட்டமிடல் குறித்தும் இரு நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு இடையிலான இருதரப்புக் கொள்கை ஆலோசனைகளை மேலும் வலுப்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338564®=3&lang=1
***
TV/IR/PS/SU