இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 5:58PM by PIB Chennai
2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக, கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பொழிவு இல்லாத பகுதிகளிலும் இணையவழி சுயகணக்கெடுப்பு இன்று (17.11.2026) தொடங்கியது. பொதுமக்கள் நவம்பர் 30 வரை se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் விவரங்களையும், குடும்ப விவரங்களையும் பதிவு செய்யலாம்.
இதற்காக, முதல் கட்டத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணைப் பயன்படுத்துவது சிறந்தது. குடும்பம், தனிநபர் தொடர்பான 40 கேள்விகளுக்குப் பதிலளித்ததும் தனித்துவமான அடையாள எண் (SE ID) வழங்கப்படும். அதை கணக்கெடுப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த மாநிலங்களில் 2026 டிசம்பர் 1 முதல் 2027 ஜனவரி 4 வரை வீடுவீடாகக் கணக்கெடுப்பு நடைபெறும். ஜனவரி 5 முதல் 9 வரை மீண்டும் சரிபார்க்கப்படும். மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை கணக்கெடுப்பு நடைபெறும். அங்கு ஜனவரி 10 முதல் 24 வரை சுயகணக்கெடுப்பில் பங்கேற்கலாம்.
முதல் கட்ட வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு மணிப்பூரைத் தவிர 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளது.
முதன்முறையாக டிஜிட்டல் முறையில், 16 இந்திய மொழிகளில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. இணையத்தில் பதிவு செய்யாத வீடுகளிலும் கணக்கெடுப்பாளர்கள் நேரில் விவரங்களைச் சேகரிப்பார்கள்.
1948-ம் ஆண்டு கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். அவை புள்ளிவிவரப் பயன்பாடு, வளர்ச்சித் திட்டமிடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்தப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337054®=3&lang=1&_gl=1
***
SK/PLM/GS