வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா- எகிப்து இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 9:37AM by PIB Chennai

இந்தியா- எகிப்து இடையேயான 7-வது கூட்டு வர்த்தகக் குழுவின் ஆலோசனை கூட்டம் எகிப்தில் நடைபெற்றது. இதில், இந்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், எகிப்து நாட்டின் முதலீடு, வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் திரு முகமது ஃபரித் சலே ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா- எகிப்து இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை 12 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஏற்றுமதியை ஊக்குவிப்பது, வர்த்தகத்தில் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான விதிகளை ஆராய ஒரு கூட்டுப் பணிக்குழுவை நியமிக்க இரு நாடுகளின் அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

2025-2026-ம் நிதியாண்டில் இந்தியா- எகிப்து இடையேயான வர்த்தகம் 35 சதவீதம் அதிகரித்து 6.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருப்பதாகவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 2026 ஏப்ரல்- செப்டம்பரில் வர்த்தகம் 65 சதவீதம் அதிகரித்து 5.04 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்ததாகவும், 2025-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் வர்த்தகம் 3.08 பில்லியன் டாலராக இருந்ததாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில், மருத்துவக் கருவிகள் உற்பத்தி, மின்னணு உபகரணங்கள் தயாரிப்பு, உரம், ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் கவனம் செலுத்தி பரஸ்பரம் முதலீடுகள் செய்வது குறித்தும்,  இந்தியா- எகிப்து இடையேயான கூட்டு வர்த்தகக் குழு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், மருந்துகள், தடுப்பூசிகள் தயாரிப்பு, மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகியவற்றில் இருநாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கான இயந்திரங்கள் உற்பத்தி, வேளாண் துறை, உணவுப் பாதுகாப்பு, உரங்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும் இந்தியா- எகிப்து நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், இருநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பும் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336726&reg=3&lang=1

***

SS/LN/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2336952) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati