இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 12:39PM by PIB Chennai
புவனேஷ்வரில் நடைபெற்ற 17-வது ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பயிற்சி திட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளமான ஜனநாயக பாரம்பரியங்களைக் காக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுகொண்டார். ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், அறிவுப்பூர்வமிக்க உரையாடல்கள், சட்டமியற்றும் திறன், மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்த சட்டப்பேரவைத் தலைவர் திருமதி சுராமா பதியைப் பாராட்டுவதாக கூறிய குடியரசு துணைத்தலைவர், இதுபோன்ற முன்முயற்சிகள் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய அரசியலமைப்புக் கடமைகளைத் திறன்மிக்க வகையில் நிறைவேற்றுவதற்கும் உதவும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் பழமையான ஜனநாயக பாரம்பரியங்கள் குறித்து குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், பண்டைய காலங்களில் ஜனநாயக முறையில் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்த தற்போதைய பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டம், சோழர்கால குடவோலை முறை ஆகியவற்றை எடுத்துரைத்து இந்தியாவில் ஜனநாயகம் என்பது நாகரீக வரலாற்றில் ஆழமாக வேரூன்றி உள்ளதாக கூறினார். இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்று பெருமைப்பட கூறப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த மகத்துவமான பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தேர்தல் வெற்றிகள் என்பது அர்த்தமுடைய பொதுச்சேவையாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர், வாக்குகளால் தேர்தலில் நாம் வெற்றி பெறுகிறோம். ஆனால் நமது சேவையால் மட்டுமே மக்களிடமிருந்து மரியாதையைப் பெறமுடியும் என்று கூறினார். சட்டப்பேரவை என்பது விவாதங்களுக்கான தளமாக மட்டுமின்றி அங்கு உருவாக்கப்படும் ஒவ்வொரு கொள்கையும், எழுப்பப்படும் கேள்வியும், இயற்றப்படும் சட்டமும் எண்ணற்ற குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் சாத்தியமிக்கவை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336781®=3&lang=1
***
TV/IR/SM/RJ