இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2026 11:01AM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் அஞ்சாரில் அமைந்துள்ள வெல்ஸ்பன் வேர்ல்டு நிறுவனத்தின் நவீன ஜவுளி உற்பத்தி வளாகத்தைப் பார்வையிட்டார். அங்கு நடைபெறும் உற்பத்திப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பருத்தியிலிருந்து நூல் தயாரிப்பது தொடங்கி, துண்டுகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இறுதிப் பொருட்களைத் தயாரிப்பது வரையிலான அனைத்து நிலைகளையும் பார்வையிட்டார். ஒரே வளாகத்தில் நூல் தயாரிப்பு முதல் இறுதி தயாரிப்புப் பொருள்களுக்கான உற்பத்தி வரை அனைத்துப் பணிகளும் நடைபெறும் வகையில் முழுமையான உற்பத்திக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதை அவர் பாராட்டினார்.
பசுமையான மரங்கள் சூழ அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 'தோட்டத்திற்குள் ஒரு உற்பத்தி வளாகம்' என்ற கருத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். தொழில் வளர்ச்சியும் இயற்கைப் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல எனவும் இரண்டையும் இணைத்துச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இந்த வளாகம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மரங்கள் பூமிக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற இயற்கைச் சொத்து என்றும், அவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறினார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, நவீன தொழில்துறை வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல், இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், நிலையான உற்பத்தி முறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவை அவசியம் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336127®=3&lang=1
(Release ID : 2336127)
****
TV/PLM/SH