பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுவிட்சர்லாந்து அதிபருடன் கூட்டாக ஊடகங்களைச் சந்திக்கும்போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 2:26PM by PIB Chennai

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

சுவிட்சர்லாந்து அதிபரை இந்தியாவில் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முதலாவதாக, இந்தியா - சுவிட்சர்லாந்து உறவுகளை மேம்படுத்துவதில் அவர் காட்டிவரும் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அவரது தனிப்பட்ட ஆதரவுடன், இந்தியாவுக்கும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தகக் கழக நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நாம் நடைமுறைப்படுத்தினோம். ஐரோப்பாவில் உள்ள எந்தவொரு பொருளாதாரக் கூட்டமைப்பினருடனும் இந்தியா மேற்கொண்டுள்ள முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.

இது முதலீடு, புத்தாக்கம், வேலைவாய்ப்புகள் மற்றும் கூட்டு வளம் மற்றும் வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குத் திட்டமாகும். இதன் மூலம், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடுகளையும், 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் இலக்குகளை அடைய நாம் திட்டமிட்டுள்ளோம்.

நண்பர்களே,

இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையேயான நட்பு பல நூற்றாண்டுகள் பழமையானது. 19ம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தர் சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைகளில் இமயமலையின் சாயலைக் கண்டார். மகாத்மா காந்தியும் சுவிட்சர்லாந்தில் தங்கி, அங்குள்ள மக்களுடன் உரையாடினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணங்களின் நினைவுகள் இன்றும் நமது நட்பில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

இப்போது, புத்தாக்கம், உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை நமது கூட்டுறவின் வலிமையான தூண்களாகத் திகழ்கின்றன. இன்றைய உச்சிமாநாட்டின் மூலம், நமது பங்காளித்துவத்திற்குப் புதிய புத்துயிர் அளித்து அதனை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லவுள்ளோம்.

நண்பர்களே,

சுவிட்சர்லாந்தில் இந்தியப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை அதிகரிப்பதற்கும், இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகளை எளிதாக்குவதற்கும் பல முக்கியமான முடிவுகளை நாம் எடுத்துள்ளோம்.

இது சுவிட்சர்லாந்தில் இந்திய விவசாயப் பொருட்கள், மருந்துகள், ஜவுளிகள் மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். அதே நேரத்தில், உயிரி தொழில்நுட்பம், உயிர் அறிவியல், வங்கித் துறை, காப்பீடு, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மை போன்ற இந்தியாவின் முக்கிய துறைகளில் புதிய சுவிட்சர்லாந்து முதலீடுகளை ஈர்ப்போம். இந்த முன்னெடுப்புகள் மூலம், உலகிற்கான நம்பகமான விநியோக இணைப்பையும் நிலையான தீர்வுகளையும் உருவாக்க நாம் இணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்களே,

இன்று, ராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி செய்வதற்கான புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அணுசக்தித் துறையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

வாரணாசி ரோப்வே, நொய்டாவில் உள்ள ஜெவார் விமான நிலையம், மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் செயல்படுத்தப்படும் ரயில்வே மற்றும் சுரங்கப் பாதை திட்டங்கள் ஆகியவை நமது உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், போக்குவரத்து வசதி மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம்.

சுவிட்சர்லாந்து உள்கட்டமைப்பு நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்யவும், திறன் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளில் பங்கேற்கவும் நாங்கள் அழைக்கிறோம்.

நண்பர்களே,

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பும் நமது கூட்டுறவின் வலிமையான தூணாக உள்ளது. சுகாதாரம், தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் விரைவில் புதிய கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடங்கவுள்ளோம் என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் அறிவியல் புத்தாக்க நிறுவனங்களின் திறனை வளர்க்க ஜூரிச் பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தையும் நாங்கள் வரவேற்கிறோம்.

சுவிட்சர்லாந்தில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் புகழ் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இத்துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும் இன்று அர்த்தமுள்ள விவாதத்தை மேற்கொண்டோம்.

நண்பர்களே,

மக்கள் இடையேயான உறவுகளே நமது கூட்டுறவின் மிகப்பெரிய பலமாகும். இன்று கையெழுத்திடப்பட்ட குடியேற்றம் மற்றும் இடப்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் ஒப்பந்தம் ஆகியவை இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுவிட்சர்லாந்தில் பல புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

நண்பர்களே,

இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.

உக்ரைன் விவகாரமாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, அமைதிக்கான ஒவ்வொரு அர்த்தமுள்ள முயற்சியையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது.

வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதிலும் நாங்கள் உடன்படுகிறோம்.

நண்பர்களே,

பெரிய அளவிலான வர்த்தகப் பிரதிநிதிகளுடன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அக்டோபர் 7ம் தேதி, அவரது முன்னிலையில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கழக தலைவர்களுடன் "வளமை உச்சிமாநாட்டை" நடத்தவுள்ளோம். நமது வர்த்தக மற்றும் முதலீட்டுப் பங்களிப்பின் வாக்குறுதிகளை உறுதியான பலன்களாக மாற்றுவதற்கு இந்த உச்சிமாநாடு ஒரு முக்கியமான தளமாகச் செயல்படும். இம்மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து வர்த்தகத் தலைவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு சுவிட்சர்லாந்து அதிபர் அவர்களே,

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், உலகிலேயே மிகப்பெரிய ஏஐ உச்சிமாநாட்டை இந்தியா நடத்தியது. அடுத்த ஆண்டு, "ஜெனீவா செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு" மூலம் சுவிட்சர்லாந்து இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும். ஜெனீவா செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் வெற்றிக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொறுப்புள்ளதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மனிதத்தை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இந்தியாவிற்கு வருகை தந்தமைக்கும், இந்தியா - சுவிட்சர்லாந்து உறவுகளுக்கு வலுவான ஆதரவாளராக விளங்குவதற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தி மொழியில் வழங்கப்பட்டது.)

 

(Release ID: 2319086)

***

AD/VK/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335750) வருகையாளர் எண்ணிக்கை : 11