இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 9:41PM by PIB Chennai
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு குறித்த இரண்டு நாள் தேசியத் துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் பங்கேற்பு என்பதை வலியுறுத்தி, அங்கன்வாடி மையங்கள் தனித்துச் செயல்படும் அமைப்புகளாக இல்லாமல், சமூகப் பங்கேற்புக்கான மையங்களாகத் திகழ வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், சிறப்பு நிகழ்வுகளின்போது சத்தான உணவுகள், விளையாட்டுப் பொருட்கள், உள்ளூர் சூழலுக்கு ஏற்ற பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்கி தங்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் அங்கன்வாடி மையங்களுடன் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களை பல்கலைக்கழகங்கள் தத்தெடுத்து, சமூகத் தாக்க ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்கள் பங்கேற்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குவதுடன், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான பயனுள்ள நுண்ணறிவுகளையும் பெற முடியும். இதேபோல், மருத்துவ மாணவர்கள், என்எஸ்எஸ், என்சிசி தன்னார்வலர்களையும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமூக முன்முயற்சிகளுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பிரதமர் விரிவாகப் பேசினார். பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், அவர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை குறித்து சிறார்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் அல்லது பயிற்சித் தொகுப்புகளை உருவாக்குமாறு அவர் பரிந்துரைத்தார். மேலும், பல்வேறு துறைகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவர் முக்கியத்துவம் அளித்தார்.
மகளிர் மேம்பாட்டிற்காக 'உள்ளூர் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுத்தல்', 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' போன்ற தேசிய இயக்கங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். உள்ளூர் தயாரிப்புகள், வாழ்வாதாரங்கள், பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்துவதில் மகளிர் கூட்டமைப்புகளும் சமூக நிறுவனங்களும் முக்கியப் பங்காளிகளாகத் திகழ முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321595®=3&lang=1
***
TV/BR/SH