வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-26-ம் ஆண்டின் சிறந்த தூய்மைப் பணிக்கான விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர்; தூய்மையான நகரமாக தேனி மாவட்டத்தின் அல்லிநகர் தேர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 8:31PM by PIB Chennai

புதுதில்லியின் விக்யான் பவனில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட  2025-26-ம் ஆண்டின்  சிறந்த தூய்மைப் பணிக்கான விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு மனோகர் லால், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு தோக்கன் சாஹு முன்னிலையில் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, 5 பிரிவுகளின் கீழ் மொத்தம் 60 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறந்து விளங்கும் நகரங்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாகச் செயல்பட்ட 30 நகரங்களுக்கு 'மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்கும் தூய்மையான நகரம் விருது’  வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் அல்லிநகர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 

விழாவில் பேசிய  குடியரசுத்தலைவர், தூய்மையை ஒரு தனி அமைப்பின் முயற்சியால் மட்டும் அடைந்துவிட முடியாது என்றும், அதற்கு அனைத்துத் தரப்பினரின் தீவிர பங்களிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தினார். குடிமக்களின் பங்கேற்பு, நடத்தையில் மாற்றம், நிர்வாகப் பொறுப்புக்கூறல், பொதுமக்களின் தொடர்ச்சியான ஈடுபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். குடிமக்கள், உள்ளூர் நிர்வாகங்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்  ஒன்றிணைந்து செயல்படும்போதும், தூய்மைப் பணியாளர்களின் களப்பணி சார்ந்த ஆலோசனைகளுக்கும் குடிமக்களின் கருத்துகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்போதும், தூய்மைப் பராமரிப்பில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தூய்மையான இணை நகரங்கள்  முன்முயற்சியின் கீழ், அறிவுப் பகிர்வை எளிதாக்கவும், சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும் 70 முன்னோடி நகரங்கள், 191 பயன் பெறும் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திரு மனோகர் லால் கூறினார். ‘பிரகதி-50' முன்முயற்சியை சுட்டிக்காட்டிய திரு மனோகர் லால், தொழில்நுட்பம் சார்ந்த தலையீடுகள், தொடர் கண்காணிப்பு மூலம் 50 நகரங்கள் மாதிரி தூய்மை நகரங்களாக மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தூய்மையை நகர்ப்புற வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கும், தூய்மையான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் அரசு மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335207&reg=48&lang=2

****

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335250) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Gujarati , Kannada