PIB Backgrounder
azadi ka amrit mahotsav

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் காளான் வளர்ப்புத் தொழில்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 10:17AM by PIB Chennai

ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தோட்டக்கலைத் துறையில் காளான் வளர்ப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது. குறைந்த முதலீடு, குறைந்த தண்ணீர் தேவையுடன் குறைந்த இடவசதியில் காளான் வளர்க்கப்படுவதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளுக்கு இது சிறந்த வாழ்வாதார வாய்ப்பாக உருவெடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள் மூலமாக இளைஞர்கள், பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு காளான் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூத்து என்ற பெண், தனது கடின உழைப்பாலும், காளான் வளர்ப்புப் பயிற்சியின் மூலமாகவும் தனது வாழ்க்கையை மாற்றிக் காட்டியுள்ளார். காளான் வளர்ப்பில் பயிற்சி பெற்ற அவர், பால் காளான்களை வெற்றிகரமாக உற்பத்தி செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு மாதந்தோறும் கணிசமான வருமானம் கிடைப்பதுடன், கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களுக்கும் அவர் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இதேபோல், பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தேவி காளான் வளர்ப்பில் காட்டிய ஈடுபாடு காரணமாக அந்தக் கிராமமே காளான் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவிகளுடன் காளான் விதை உற்பத்தி ஆய்வகத்தை நிறுவிய அவர், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் கூட காளான் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளரான அஞ்சனாபென் காமிட், சிறிய அளவில்  சிப்பிக் காளான் வளர்ப்பைத் தொடங்கி, பின்னர் அதனை விரிவுபடுத்தி நல்ல லாபம் ஈட்டி வருகிறார். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐடி துறை ஊழியர் ஹிரேஷா வர்மா, சிறிய அளவில் தொடங்கிய காளான் வளர்ப்பினை இன்று பெரு நிறுவனமாக மாற்றி பலருக்குப் பயிற்சி அளித்து வருகிறார். பாகேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன்மோகன் என்ற விவசாயி, நவீன பாலிஹவுஸ் தொழில்நுட்பத்தின் மூலம் காளான் மற்றும் காய்கறி சாகுபடி செய்து தனது வருமானத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களும், அறிவியல் பூர்வமாக வழங்கப்பட்ட பயிற்சிகளும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளன. வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த காளான் வளர்ப்புத் தொழில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334518&reg=3&lang=1

***

SS/PD/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334669) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Gujarati