இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 3:24PM by PIB Chennai
பிரதமர்: ஸ்மித், வணக்கம்.
கேப்டன் ஸ்மித்: ஜெய் ஹிந்த், ஐயா. வணக்கம், ஐயா.
பிரதமர்: இப்போது எப்படி இருக்கிறீர்கள், உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது?
கேப்டன் ஸ்மித்: ஐயா, எல்லாம் நன்றாக இருக்கிறது ஐயா, அனைத்தும் நலம்.
பிரதமர்: பாருங்கள், ஒட்டுமொத்த தேசமும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறது. எங்கும் மகா மிருத்யுஞ்சய ஜபம் நடந்து கொண்டிருக்கிறது.
கேப்டன் ஸ்மித்: ஆம் ஐயா.
பிரதமர்: உங்கள் தைரியம், உங்கள் பொறுமை மற்றும் உங்கள் சமயோசித புத்தியால் சில நொடிகளில் நீங்கள் பல முடிவுகளை எடுத்தீர்கள்...
கேப்டன் ஸ்மித்: ஆம் ஐயா.
பிரதமர்: மேலும் பல உயிர்களைக் காப்பாற்றினீர்கள். நாம் இந்தியர்கள். உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, உயிரைக் காப்பாற்றுபவர்கள் என்று இன்று ஒட்டுமொத்த நாடும் பெருமையுடன் சொல்ல முடியும்.
கேப்டன் ஸ்மித்: முற்றிலும் உண்மை, ஐயா.
பிரதமர்: உங்கள் உடலில் இவ்வளவு பெரிய காயம் இருந்தபோதும், நீங்களே வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருந்தபோதும், அந்த நேரத்தில் உங்கள் சொந்த உயிரைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை; அனைத்துப் பயணிகளின் உயிரைப் பற்றியும் கவலைப்பட்டீர்கள். மிக முக்கியமாக, 140 கோடி நாட்டு மக்களின் கவுரவத்தை உயர்த்தியுள்ளீர்கள்.
கேப்டன் ஸ்மித்: நன்றி, ஐயா.
பிரதமர்: அதனால்தான் என் இதயத்தின் ஆழத்திலிருந்து பெருமை அடைகிறேன்.
கேப்டன் ஸ்மித்: ஐயா, நான்… மன்னிக்கவும்.
பிரதமர்: நேற்றைக்குப் புபேந்திர பாய், கீதா சகோதரி, சோனல் சகோதரி ஆகியோருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னால் ஜாவா மற்றும் பாப்பியிடம் பேச முடியவில்லை. ஆனால் கீதா சகோதரியிடம் நான் சொன்னேன்; அவரது பெயர் கீதா என்றாலும், அவர் கிருஷ்ணரின் கீதையின் சாரத்தை உண்மையில் முழுமையாக உள்வாங்கியுள்ளார். மேலும் கீதையின் அதே நற்பண்புகளைக் கொண்டே ஸ்மித்தின் வாழ்க்கையை அவர் வடிவமைத்துள்ளார்.
கேப்டன் ஸ்மித்: முற்றிலும் உண்மை, ஐயா.
பிரதமர்: ஸ்மித், இப்போது நான் உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன்.
கேப்டன் ஸ்மித்: ஐயா, நீங்கள் என் வாழ்நாளின் மிகச்சிறந்த முன்மாதிரி. மேலும் நீங்கள் என்னை இப்படி அழைத்து ஊக்கப்படுத்துவது, எனக்கு மிகமிக பெருமையாக இருக்கிறது. அந்தத் தருணத்தில், ஐயா, நான் என் உயிருக்காகத்தான் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு தருணம் வந்தது; நான் ஏதாவது செய்யாவிட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும் என்று உணர்ந்தேன். ஏனென்றால் நான் கீழே விழுந்துவிட்டேன், எனக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டன, இரும்புகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டேன். ஐயா, நான் எஃப்.இசட் விமான நிறுவனத்தில் 17 ஆண்டுகளாக விமானங்களை இயக்கி வருகிறேன். கடந்த 11 ஆண்டுகளாகக் கேப்டனாகப் பணிபுரிகிறேன். என் கண்களை மூடிக்கொண்டாலும் கூட, விமானத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை என்னால் துல்லியமாக அறிய முடியும். நான் படுத்திருந்தபோது, விமானம் கீழே இறங்குவதை என்னால் உணர முடிந்தது. இதுவே கடைசி வாய்ப்பு. ஸ்மித்தால் இதைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்திருந்தேன். கதவு அங்கேயேதான் இருந்தது. அப்போதும் நான் அடிபட்டுக்கொண்டிருந்தேன், ஆனாலும் நான் அந்த கதவைத் திறந்தேன். அதன் பிறகு அனைவரும் வெளியே வந்தனர்; ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு இருந்தது. ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், நான் என் உயிருக்காகத்தான் போராடினேன், அதே சமயம் அவர்கள் அனைவரையும் நான் சாக அனுமதிக்க முடியாது என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதன்பிறகு, இங்கே இருக்கிறேன். சவூதியில் உள்ளவர்கள், என்னை இதைவிட அன்பாகக் கவனிக்கவோ அல்லது சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவோ முடியாது. ஐயா, நான் எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கிறேன். எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம், என் நினைவுக்கு வருவது ஒன்றே ஒன்றுதான். நான் ஹனுமன் பக்தி பாடல்கள் தான். அப்போதும் கூட, நான் ஹனுமனை போற்றிக்கொண்டிருந்தேன். கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது உங்களது அழைப்பு வந்துள்ளது. எனக்கு அளவற்ற பெருமையாக இருக்கிறது. இதுவரை நான் அதை உணரவில்லை. இப்போதுதான் முழுமையாக உணர்கிறேன், ஐயா. மன்னிக்கவும், உங்களது முன்னிலையில் நான் அழுதுவிட்டேன், ஐயா.
பிரதமர்: ஸ்மித், என் முன்னிலையில் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல், வேறு எங்கு உணர்ச்சிவசப்படுவீர்கள்?
கேப்டன் ஸ்மித்: ஐயா, நான் உங்களிடம் பேசுவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை, ஒருபோதும் நினைக்கவில்லை.
பிரதமர்: சகோதரரே, நீங்கள் அப்படிப்பட்ட ஒரு மாபெரும் செயலைச் செய்திருக்கிறீர்கள், இன்று ஒவ்வொரு நாட்டு மக்களும், ஏன் உலகம் முழுவதும் உள்ள மக்கள்கூட உங்களைப் பார்க்கவும், உங்களுடன் பேசவும் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும், ஹனுமான் பாடல்களை பற்றி நீங்கள் என்னிடம் சொன்னீர்களே, அதற்காக கீதா சகோதரிக்கு நான் தலைவணங்குகிறேன், அவர் உங்களுக்கு அப்படிப்பட்ட நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்; புபேந்திர அண்ணாவுக்கு நான் தலைவணங்குகிறேன்.
மேலும் உங்களிடம் சொல்கிறேன் ஸ்மித், நேற்றைக்கு நான் சோனல் சகோதரியுடன் பேசியபோது ஆச்சரியப்பட்டேன். அவர் அவ்வளவு நிதானமாகப் பேசினார்.
கேப்டன் ஸ்மித்: ஆம், ஐயா.
பிரதமர்: அவர் அவ்வளவு தைரியத்துடன் பேசினார். உண்மையைச் சொன்னால், இதுபோன்ற சூழ்நிலைகளில் சோனல் சகோதரியால் இவ்வளவு நிதானமாகப் பேச முடியுமா என்று நான் ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. எனவே ஒரு குடும்பமாக, நீங்கள் உண்மையில் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன்.
கேப்டன் ஸ்மித்: ஐயா, ஒவ்வொரு நாளும் காலையில் நான் பிரார்த்தனை செய்யும்போது, எனது இரண்டு வயது மகன் என் மடியில் உட்காருவான், நான் அவனுக்கு ஹனுமான் பக்தி பாடல்களை சொல்லித்தருவேன். எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டதை நான் அவனுக்குச் சொல்கிறேன்; ஏனென்றால் இன்று நாம் நமது நாட்டிலிருந்து விலகி வாழ்ந்து கொண்டிருக்கலாம், ஆனால் நமது கலாச்சாரத்திலிருந்து எப்போதும் விலகியிருக்கக் கூடாது.
பிரதமர்: அது முற்றிலும் சரி.
கேப்டன் ஸ்மித்: இப்போது, இங்கு, நாங்கள் நாட்டிலிருந்து விலகி இருப்பது போன்ற உணர்வே இல்லை. இங்குள்ள மக்கள் எங்களை மிகுந்த அன்போடும் அக்கறையோடும் கவனித்துக் கொள்கிறார்கள்.
பிரதமர்: உங்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம், ஆனால் சாவர்குண்ட்லா மற்றும் வத்வானில் மக்கள் ஒரு உணர்ச்சிகரமான சூழலை உருவாக்கியுள்ளனர். இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். நேற்றுகூட எங்கும் உள்ள கோயில்களில் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் ஆராதனையும் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் உள்ள திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உங்களது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக விரைவில் குணமடையப் போகிறீர்கள். உங்களை வரவேற்க இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது. இப்போது, நீங்கள் என்ன மாதிரியான உடல் வலியை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ஒரு தைரியமான மனிதர், எனவே காயங்களை தாங்குவதை நீங்களே எளிதாக எடுத்துக்கொள்கிறீர்கள்.
கேப்டன் ஸ்மித்: இல்லை, ஐயா. நான் இதை ஒரு காயமாகப் பார்க்கவில்லை, ஏனென்றால் நான் இதை ஒரு காயம் என்று நினைத்தால், நான் குணமடைவது மேலும் கடினமாகிவிடும். நான் இதை ஒரு புதிய அனுபவமாக பார்க்கிறேன்; நான் குணமடைய, சிறிது காலம் ஆகும். ஆனால் நான் குணமடைந்து முழுமையாக ஆரோக்கியமாக வருவேன் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
பிரதமர்: உங்களை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டதற்காக சவூதி அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஸ்மித், உங்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும், என்னை அழைக்கலாம்.
கேப்டன் ஸ்மித்: நன்றி, ஐயா.
பிரதமர்: ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் செய்தது உண்மையிலேயே சாதாரணமானது அல்ல. நேற்றுகூட சமூக ஊடகங்களில் மக்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை இந்தச் சம்பவம் இப்படித் தவிர்க்கப்பட்டிருக்காவிட்டால், இந்தியா என்ன மாதிரியான இக்கட்டான சூழலை எதிர்கொண்டிருக்கும், நம் நாட்டின் அனைத்து விமானிகளும் எத்தகைய சோதனைகளைக் கடந்திருக்க வேண்டியிருக்கும், மற்றவர்கள் இந்திய விமானிகளை எப்படிப் பார்த்திருப்பார்கள் என்றே சொல்ல முடியாது என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெரிய இக்கட்டிலிருந்து அனைத்தையும் நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். நீங்கள் உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மாபெரும் செயலை செய்திருக்கிறீர்கள்.
கேப்டன் ஸ்மித்: ஆம், ஐயா.
பிரதமர்: நாம் நேரில் சந்திக்கும் போது, அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்; ஏனெனில் செல்போனில் உங்களுடன் இதுபோன்ற விஷயங்களைப் பேச நான் விரும்பவில்லை.
கேப்டன் ஸ்மித்: சரி, ஐயா.
பிரதமர்: மேலும் நீங்கள் முழுமையாகக் குணமடைவதில் கவனம் செலுத்துங்கள். ஒட்டுமொத்த நாடும் உங்களுடன் இருக்கிறது.
கேப்டன் ஸ்மித்: நன்றி, ஐயா.
பிரதமர்: உங்களை இனிமேலும் நான் சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று காந்தி ஜெயந்தி. அகிம்சை என்றால் என்ன என்பதை உங்கள் செயல்களின் மூலம் நீங்கள் காட்டியுள்ளீர்கள்.
கேப்டன் ஸ்மித்: நன்றி, ஐயா.
பிரதமர்: அப்படியானால் சரி, ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, என் மகனே. நாம் கொஞ்சம் குஜராத்தியிலும் பேசுவோம்.
கேப்டன் ஸ்மித்: ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, ஐயா.
பிரதமர்: பாபியும் ஜீவாவும் குஜராத்தி பேசுவார்களா இல்லையா?
கேப்டன் ஸ்மித்: இருவரும் பேசுவார்கள், ஐயா. இருவரும் குஜராத்தி பேசுவார்கள்.
பிரதமர்: அவர்கள் நன்றாகக் குஜராத்தி பேசுவார்களா?
கேப்டன் ஸ்மித்: அவர்கள் இருவரும் முதலில் குஜராத்திதான் கற்றுக் கொண்டார்கள், அதற்குப் பிறகுதான் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்கள்.
பிரதமர்: அப்படியா? குழந்தைகளைச் சந்தித்துவிட்டீர்களா? குழந்தைகளை? உங்களைச் சந்திக்க மருத்துவர்கள் அனுமதித்தார்களா?
கேப்டன் ஸ்மித்: என் மூத்த மகள் என்னைச் சந்திக்க வந்தாள், ஆனால் இதையெல்லாம் பார்த்துவிட்டு அவள் பயந்துவிட்டாள்.
பிரதமர்: அப்படியா... அப்படியா...
கேப்டன் ஸ்மித்: அவள் கொஞ்சம் உடல் நலமின்றி இருந்தாள், மேலும் அவள் என் மீது அதிக பாசமாக இருக்கிறாள். எனது இளைய மகனுக்கு இரண்டு வயதுதான் ஆகிறது, அதனால் அவனை வர அனுமதிக்கவில்லை.
பிரதமர்: அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்போது கவனிப்பு மிகவும் அவசியம்தான். ஆனால் சோனல் சகோதரி மிகவும் தைரியமானவர்.
கேப்டன் ஸ்மித்: ஆம், ஐயா.
பிரதமர்: நேற்றைக்கு அவர் என்னிடம் அவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் பேசினார். இல்லையென்றால், எனது அனுபவத்தில் பார்க்கும்போது, இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் யாராலும் பேசவே முடியாது, அந்த அளவுக்கு அவர்கள் நிலைகுலைந்து போவார்கள். ஆனால், அவரிடம் சிறிதளவுகூடப் புகாரோ ஆதங்கமோ இருக்கவில்லை. நேற்றுகூட நான் மும்பை விமான நிலையத்தில் புபேந்திர பாய் மற்றும் கீதா சகோதரியுடன் பேசினேன். அப்போதும் அவர்களிடம் எந்தவொரு குறையும் சொல்லும் எண்ணம் இல்லை. "கடவுள் எது நல்லதோ அதைத்தான் செய்வார்" என்று அவர்கள் மிகவும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் கூறினார்கள்.
கேப்டன் ஸ்மித்: ஆம், ஐயா.
பிரதமர்: அப்படியானால் சரி, ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா. சீக்கிரம் குணமடையுங்கள், அதன் பிறகு நாம் சந்திப்போம்.
கேப்டன் ஸ்மித்: சரி, ஐயா.
பிரதமர்: கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!
கேப்டன் ஸ்மித்: ஜெய் ஹிந்த்.
பிரதமர்: ஜெய் ஹிந்த்.
(பொறுப்புத்துறப்பு: "பிரதமருடனான உரையாடலின் சில பகுதிகள் குஜராத்தி மொழியில் இருந்தன. அவை துல்லியமாகப் புரியும் வகையில், அவர்கள் கூற வந்த கருத்தின் அடிப்படையில் இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.")
(Release ID: 2318181)
***
AD/VK/PD/GS