இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 5:00PM by PIB Chennai
சாலைப் போக்குவரத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு உமிழ்வைக் குறைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, ஆசியப் போக்குவரத்துக்கான தேசிய அளவிலான பங்களிப்பு முன்முயற்சியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நிதி ஆயோக் அமைப்பு மற்றும் ஜெர்மனியின் ஜிஐஇசட் இந்தியா நிறுவனம் இடையே 2026 நவம்பர் 3 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜெர்மனி அரசின் சர்வதேச பருவநிலை முன்முயற்சியின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த பிராந்திய அளவிலான திட்டத்தில், உலக வளங்கள் நிறுவனம், தூய்மைப் போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சில் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைந்த அளவு கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும் போக்குவரத்து முறைக்கு இந்தியா மாறி வரும் சூழலில், சாலை சரக்குப் போக்குவரத்தில் புகை உமிழ்வைக் குறைப்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நடுத்தர, கனரக சரக்கு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் நடவடிக்கை தற்போதைய நிலையில் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. எனவே போதிய மின்னேற்றக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், புதிய நிதி ஆதரவு முறைகளை உருவாக்குதல், முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332576®=3&lang=1&_gl=
****
SK/PD/SH