பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.21,800 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 2:43PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.21,800 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ ரயில் திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் புனே மற்றும் மகாராஷ்டிரா மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். அன்றாட வாழ்க்கையில் புதிய வசதிகள் ஏற்படும்போது பண்டிகைக்கால மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு புனே மெட்ரோவின் முதல் கட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்த பிரதமர் ஹிஞ்சவாடியிலிருந்து சிவாஜி நகர் வரையிலான வழித்தடம் முக்கியத் தகவல் தொழில்நுட்ப மையத்திற்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை அளிக்கும் என்றும், இன்று தொடங்கப்பட்ட புதிய வழித்தடம் நகரின் பழைய, புதிய பகுதிகளை இணைக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டிற்கும், சமூகத்திற்கும் தொடர்ந்து வழிகாட்டி வரும் சிந்தனைகளின் வரலாற்று மையம் என்று புனே நகரத்தை வர்ணித்த பிரதமர் தற்போது இந்நகரம் தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, மருந்துகள், புத்தொழில் நிறுவனங்கள், புதுமைக் கண்டுபிடிப்பு, உற்பத்தி துறை ஆகியவற்றில் இளைஞர்களுடைய விருப்பங்களின் மையங்களாக திகழ்வதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி புதிய சக்தியுடன் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். இது போன்ற சூழலில் மெட்ரோ இணைப்பு வலுப்படுத்தப்படுவது புனே நகரத்தின் வளரச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் திரு மோடி தெரிவித்தார்.

புனே மெட்ரோவின் விரிவாக்கம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும் வகையில் நவீன நகரங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதை காட்டுவதாக பிரதமர் கூறினார். தொழில்கள், உணவு வகைகள் அல்லது உள்ளூர் தயாரிப்புகள் போன்ற  பாரம்பரிய அடையாளங்களுக்கு அப்பால் தற்போதைய நகரங்கள் அவற்றின் போட்டித்தன்மை, எளிதான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதாகத் தெரிவித்தார். மெட்ரோ கட்டமைப்புகள் பயண நேரத்தைக் குறைத்து, கூடுதல் வசதிகளை அளிப்பதன் மூலம் இந்த அம்சங்களை மேம்படுத்துவதாகக் கூறினார். நகரத்தின் பயண நேரத்தை சேமிப்பது என்பது அதனுடைய உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் பயனடைவதாக திரு மோடி தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு 26 நகரங்களில்  சுமார் 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவடைந்துள்ளதாக அவர் கூறினார். இதன்மூலம் நாள்தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயனடைவதாக அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு உலகின் முதல் மூன்று மெட்ரோ கட்டமைப்புகளில் ஒன்றாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332011&reg=3&lang=1&_gl=1

***

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332238) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada