பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படைக்காக 8 சிறியவகை போர்க்கப்பல்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 11:53AM by PIB Chennai

இந்திய கடற்படைக்காக 8 அதிநவீன சிறியவகை போர்க்கப்பல்களை வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் நிறுவனம் (ஜிஆர்எஸ்இ), கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (ஜிஎஸ்எல்) ஆகியவற்றுடன் ரூ.53,866.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் புதுதில்லி கடமைப் பாதை 2-ல்  2026 நவம்பர் 2 அன்று பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தங்களின்படி,  ஜிஆர்எஸ்இ நிறுவனம் 5 சிறியவகை போர்க்கப்பல்களையும், ஜிஎஸ்எல் நிறுவனம் 3 சிறியவகை போர்க்கப்பல்களையும் வடிவமைக்கும். இந்திய கடற்படையால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு போட்டித்தன்மையுடன் கூடிய நடைமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் முதலாவது திட்டம் இதுவாகும். எனவே இது நாட்டின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு, கட்டுமானத் திறன்களின் முக்கிய அம்சமாகும்.

இந்த சிறியவகை போர்க்கப்பல்கள் அதிநவீன ஏவுகணைகள், ஆயுதங்கள், சென்சார் முறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உருவாக்கப்படும். அவை வான்வெளி, கடற்பரப்பு, கடலுக்கடியிலான பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளக்கூடிய திறன் கொண்டவையாகும். இக்கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்படும்போது, கடல்சார் வர்த்தகப் பாதைகளை பாதுகாத்தல், கடல்பரப்பு, கடலுக்கடியிலான போர் நடவடிக்கைகள், கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் கடற்படையின் செயல்திறன் பெருமளவில் மேம்படும்.

இத்திட்டம் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கப்பல் கட்டும் தளங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் உட்பட இந்திய தொழில்துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் சூழலுக்கு பெரும் ஊக்கமளிக்கும்.

இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் கப்பல் கட்டும் தளங்களில் 72 லட்சம் மனித வேலை நாட்களையும், துணை தொழில்துறைகள், குறு, சிறு, நடுத்தர தொழில்துறைகளில் 460 லட்சம் மனித வேலை நாட்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331418&reg=48&lang=1

***

SS/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2331540) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Malayalam