இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 3:24PM by PIB Chennai
12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டமைப்பு 2026 கூட்டத்தை புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் சாசன மாளிகையில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், மக்களை மையமாக கொண்ட வளர்ச்சி, உலக அமைதி, நீடித்தத் தன்மை, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கிய தங்களுடையக் கூட்டு உறுதிப்பாட்டை வலுப்படுத்துமாறு பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாண்மை நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், பரஸ்பர புரிதலை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்வில் அர்த்தமுடைய நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரவும், அனைத்து நாடுகளின் ஞானத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துச் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாண்மை நாடுகளின் குழுவினரை வரவேற்ற திரு பிர்லா, அவர்களுடைய வருகை உரையாடல், நாடாளுமன்ற ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை, ஜனநாயக மாண்புகள் மீதான பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். புவியியல், கலாச்சார, மொழி, சமூக பன்முகத்தன்மை ஆகியவை இருந்தாலும் ஜனநாயக கொள்கைகள் மீதான நம்பிக்கையாலும், மனித சமூகத்தின் மீதான பொதுவானப் பொறுப்புணர்வாலும் அந்த நாடுகள் ஒருங்கிணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பன்முகத் தன்மையை வலிமையின் ஆதாரமாகவும் பொதுவான நோக்கமாகவும் கூட்டு முன்னேற்றமாகவும் மாற்றக்கூடிய திறனில் தான் பிரிக்ஸ் அமைப்பின் உண்மையான பலம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கூட்டறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஒரு மைல் கல் என்று கூறிய திரு பிர்லா உறுப்பு நாடுகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328441®=3&lang=1
***
TV/IR/SM/SH