PIB Backgrounder
தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிக்கும் நீரேற்று மின் சேமிப்பு முறை
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 11:02AM by PIB Chennai
தூய்மையான எரிசக்தி இந்தியாவின் மின்சாரத் துறையை மாற்றி அமைத்து வரும் நிலையில், ஒரு காலத்தால் அழியாத தொழில்நுட்பம் சக்திவாய்ந்த புதிய மின்சக்தி எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது. பெரும்பாலும் நீர் மின்கலம் என்று விவரிக்கப்படும் உந்தப்பட்ட சேமிப்பு முறையானது, மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நேரத்திற்கும் அது தேவைப்படும் நேரத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்காக, நீரையும் புவியீர்ப்பு விசையையும் பயன்படுத்துகிறது. நீர்த்தேக்கங்கள் முதல் நவீன மின்கட்டமைப்புகள் வரை, இது தூய்மையான, நம்பகமான, மீள்திறன் கொண்ட ஒரு மின்சக்திக்கான எதிர்காலத்தை வடிவமைக்க உதவுகிறது.
மின் சேமிப்புத் தொழில்நுட்பம் :
எரிசக்திப் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வலுப்படுத்துவதற்காக, இந்தியாவின் எரிசக்தி மாற்றம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் சார்ந்துள்ளது. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைத் தூய்மையான மூலங்களைக் கொண்டு பூர்த்தி செய்வதற்காக, நாடு சூரிய, காற்றாலை மின் உற்பத்தித் திறனை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. ஜூலை 2026 நிலவரப்படி, புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனில் இந்தியா 300 ஜிகாவாட்டைக் கடந்துள்ளது. 2025-26-ம் நிதியாண்டில், இந்தியா சுமார் 55.29 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனை அதிகரித்தது. 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனை எட்டுவதையும் இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதில் சூரிய, காற்றாலை மின்சக்திகள் பெரும் பங்களிப்பை வழங்க உள்ளன.
இருப்பினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியானது சூரிய ஒளி, வானிலை, தினசரி தேவை முறைகளைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த மாறுபாடு மின்சாரத்தைச் சேமிக்க வேண்டிய தேவையை அதிகரிக்கிறது. இந்த மின் சேமிப்பை, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி குறைவாக இருக்கும் காலங்களிலும் அல்லது தேவை உச்சத்தில் இருக்கும் காலங்களிலும் பயன்படுத்த முடியும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் விரிவடையும்போது, மின்சார சேமிப்பிற்கான தேவையும் வேகமாக அதிகரிக்கும். மத்திய மின்சார ஆணையம், 2031-32-ம் ஆண்டிற்குள் 73.93 ஜிகாவாட் சேமிப்புத் திறன் தேவைப்படும் என கணித்துள்ளது. இதில், நீரேற்று சேமிப்புத் திட்டங்களிலிருந்து 26.69 ஜிகாவாட்டும், மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்புகளிலிருந்து 47.24 ஜிகாவாட்டும் அடங்கும்.
இந்த நீண்ட கால சேமிப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மின் விநியோக அமைப்புகள் ஒரு முக்கியப் பங்காற்ற முடியும். உபரி மின் உற்பத்தி காலங்களில், நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்கள் எனப்படும் பிஎஸ்பி-க்கள், நீரை ஒரு மேல் நீர்த்தேக்கத்திற்குப் ஏற்றுவதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கின்றன. மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது, சேமிக்கப்பட்ட நீர் டர்பைன்கள் மூலம் வெளியிடப்படுகிறது. இது, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை காலப்போக்கில் மாற்றி அமைக்கவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும், அவை நீண்ட கால சேமிப்பை வழங்குவதால், பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன்களை ஒருங்கிணைப்பதற்கு அவை முக்கியமானவையாகின்றன.
பிஎஸ்பி-களைப் புரிந்துகொள்ளுதல்:
ஒரு நீரேற்று சேமிப்புத் திட்டம் என்பது பொதுவாக வெவ்வேறு உயரங்களில் அமைந்துள்ள இரண்டு நீர்த்தேக்கங்களைக் கொண்டிருக்கும். மின்சாரம் உபரியாக இருக்கும் காலங்களில், கீழ் நீர்த்தேக்கத்திலிருந்து மேல் நீர்த்தேக்கத்திற்கு நீர் உந்தப்பட்டு, அங்கு மின்சாரம், நிலை ஆற்றலாகச் சேமிக்கப்படுகிறது. மின்சாரம் தேவைப்படும்போது, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மேல் நீர்த்தேக்கத்திலிருந்து விசையாழிகள் மூலம் நீர் வெளியிடப்படுகிறது. தேவை குறைந்தவுடன், மின்சாரம் உபரியாக இருக்கும் காலங்களில் நீர் மீண்டும் மேல் நீர்த்தேக்கத்திற்கு உந்தப்பட்டு, சேமிப்புச் சுழற்சி நிறைவடைகிறது. எனவே, நீரேற்று சேமிப்புத் திட்டங்கள் பெரிய அளவிலான மின் சேமிப்பு அமைப்புகளாகச் செயல்பட்டு, மின்கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பிற்கும் பங்களிக்கின்றன.
தூய்மையான எரிசக்தி சூழலமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், உற்பத்தி, மின்பரிமாற்ற உள்கட்டமைப்புகளுடன் மின்சார சேமிப்பைத் திறம்படப் பயன்படுத்துவது, தூய்மையான, அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு மின்சார அமைப்பைக் கட்டமைப்பதில் முக்கிய அம்சமாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324992®=3&lang=1
****
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325224)
வருகையாளர் எண்ணிக்கை : 5