மருந்துகள் துறை
137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் மீதான வர்த்தக லாப வரம்பு சீரமைப்பு - திருத்தப்பட்ட விலைகள் 2026 நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 6:53PM by PIB Chennai
ரசாயனம், உரத் துறை அமைச்சகத்தின் மருந்துத் துறையின் கீழ் செயல்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், அதிகப்படியான வர்த்தக லாப வரம்புகளைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை மேலும் குறைந்த செலவுடையதாக மாற்றவும், பொது நலன் கருதி, அடையாளம் காணப்பட்ட 137 அட்டவணைப்படுத்தப்படாத புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு வர்த்தக லாப வரம்பு சீரமைப்பை மேற்கொண்டுள்ளது. இது இந்த மருந்துகளின் தற்போதைய விலைகளைப் பொறுத்து, அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையை 70% வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய இந்த நடவடிக்கையானது, சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் கீழ் உள்ள நிபுணர் குழு பரிந்துரைத்த பட்டியலின் அடிப்படையில், பெரிய அளவிலான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு விரிவுபடுத்துகிறது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய நிபுணர் குழுவில் முன்னணி புற்றுநோய் மருத்துவர்கள், மருத்துவ வல்லுநர்கள், நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளின் நிபுணர்கள், அரசு அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். அது, 137 மருந்துகளைப் பரிந்துரைத்து விவாதித்தது. இந்தப் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
இன்று (அக்டோபர் 17, 2026) வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பு, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமான என்பிபிஏ-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nppa.gov.in/en -ல் உள்ளது. இந்த நடவடிக்கை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கும் குடும்பங்களுக்கும் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசிதழ் அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் அனைத்து உற்பத்தியாளர்களும் தங்களின் திருத்தப்பட்ட விலைகளை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். திருத்தப்பட்ட விலைகள் நவம்பர் 9, 2026 முதல் அமலுக்கு வரும். உற்பத்தியாளர்கள் தங்கள் இணையதளத்தில் விலைப்பட்டியல்களைக் காட்சிப்படுத்த வேண்டும். அத்துடன் அதை அனைத்து சில்லறை விற்பனையாளர்களுக்கும மருத்துவமனைகளுக்கும் பரவலாகப் பகிர வேண்டும். நுகர்வோர் மருந்துகளின் திருத்தப்பட்ட விலைகளைச் சரிபார்க்க இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324743®=3&lang=1
(Release ID : 2324743)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324772)
வருகையாளர் எண்ணிக்கை : 31