மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

ஆண்டுதோறும் ரூ. 2,500 கோடி வரை சேமிக்கும் வகையில் புற்றுநோய் மருந்துகளுக்கான விலை கட்டுப்பாடுகளை அரசு விரிவுபடுத்தியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 10:04PM by PIB Chennai

1. கூடுதல் புற்றுநோய் மருந்துகளுக்கும் விலை பாதுகாப்பை விரிவுபடுத்துதல்

பட்டியலிடப்படாத புற்றுநோய் மருந்துகளின் விநியோகம் மற்றும் விற்பனையின்போது விதிக்கப்படும் லாப வரம்புகளுக்கு மத்திய அரசு ஒரு உச்சவரம்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த லாப வரம்புகள், மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையில் 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்குமாறு வரையறுக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் மருந்துகளின் விலை 70% வரை குறையும் என்றும், நோயாளிகள் ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி வரை சேமிக்க முடியும். பட்டியலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அத்தியாவசிய மருந்துகள் ஏற்கனவே அரசு நிர்ணயித்த கடுமையான அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுள்ளன. நோயாளிகளைச் சென்றடைவதற்கு முன் சேர்க்கப்படும் லாப வரம்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அந்தப் பட்டியலில் இல்லாத மருந்துகளுக்கும் விலை பாதுகாப்பை நீட்டிக்கும் வகையில் இந்த புதிய முடிவு அமைந்துள்ளது.

சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் உள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டு,  சேர்க்கப்பட வேண்டிய மருந்துகளின் பட்டியலை இறுதி செய்யும். அதனைத் தொடர்ந்து, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) முடிவை வெளியிடும்.

 

2. புற்றுநோய் சிகிச்சையின் அதிகப்படியான செலவைக் குறைத்தல்

இந்தியாவில்  ஒரு லட்சம் மக்கள் தொகையில் சுமார் 60 பேர் பாதிக்கப்படும் வகையில் நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சந்தை நிலவரம் குறித்த என்பிபிஏ-வின் ஆய்வில், விலைக்கட்டுப்பாட்டுப் பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலையில் சராசரியாக சுமார் 170% கூடுதல் கட்டணம் சேர்க்கப்படுவது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் இது 700% அல்லது அதற்கும் அதிகமாகவும் உள்ளது. சில்லறை மருந்தகம், மருத்துவமனை மருந்தகம், இணையவழி மருந்தகம் ஆகியவற்றில் எங்கு வாங்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து மருந்துகளின் விலைகளில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இத்தகைய அதிக லாப வரம்புகள், விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளில், நோயாளிகளின் சிகிச்சைச் செலவுகளைப் பெருமளவில் அதிகரிக்கின்றன. இந்தப் புதிய உச்சவரம்பு, அதீத லாப வேட்டையைக் கட்டுப்படுத்தி, சந்தையில் நிலவும் நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளைச் சரிசெய்து, நோயாளிகளுக்கு நியாயமான விலைகளை உறுதிசெய்ய உதவும்.

 

3. 2019-ம் ஆண்டு முடிவின் மூலம் அளிக்கப்பட்ட நிவாரணத்தின் மேம்பாடு

2019 பிப்ரவரியில், அரசின் உத்தரவின் பேரில், பட்டியலிடப்படாத 42 புற்றுநோய் மருந்துகளுக்கான வர்த்தக வரம்புகளை என்பிபிஏ நிர்ணயம் செய்தது. இந்த முடிவின் மூலம் அதிகபட்ச சில்லறை விலைகள் 91% வரை குறைக்கப்பட்டன.  இதன் விளைவாக 526 மருந்து வகைகளில் ஆண்டுக்கு ரூ. 984 கோடி சேமிப்பு ஏற்பட்டது. அந்த அனுபவத்தின் அடிப்படையில், விநியோகச் சங்கிலியில் கண்டறியப்பட்ட விலை நிர்ணயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், அரசு இப்போது விரிவான விலை உச்சவரம்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

4. உற்பத்தியைப் பராமரித்தல் மற்றும் இருப்பை உறுதி செய்தல்

உயிர்காக்கும் இந்த மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, பட்டியலில் இணைக்கப்படாத புற்றுநோய் மருந்துகளைத் தயாரிப்பவர்கள் தங்களது தற்போதைய உற்பத்தி அளவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கை, பிராண்டட், உயிர் காக்கும் மருந்துகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, இறக்குமதி செய்யப்பட்டவை, காப்புரிமை பெற்றவை மற்றும் பெறாதவை எனப் பல்வேறு வகைகளைச் சேர்ந்த, பட்டியலிடப்படாத மருந்துகளை உள்ளடக்கியிருக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321092&reg=48&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321112) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Kannada