மக்களவை செயலகம்
மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரிக்கு ஆகியோருக்கு பிரதமர், மக்களவைத் தலைவர் மரியாதை செலுத்தினர்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 5:00PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே; மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிதின் நபின், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், பிற முக்கிய பிரமுகர்கள், இன்று (02.10.2026) பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில், தேசத்தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, உருவப்படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மக்களவையின் செயலாளர் திரு உத்பால் குமார் சிங், மாநிலங்களவையின் செயலாளர் திரு பி.சி. மோடி ஆகியோரும் இந்நிகழ்வில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில், 'உங்கள் தலைவரை அறிந்துகொள்ளுங்கள்' திட்டத்தின் ஒரு பகுதியாக, சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே உரையாற்றிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் வாழ்க்கை, லட்சியங்கள், பொதுச் சேவை ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்று, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் உறுதி பொறுப்புணர்வுடன் பங்களிக்க வேண்டும் என்று இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
இளம் பங்கேற்பாளர்களை வரவேற்றுப் பேசிய மக்களவைத் தலைவர், வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் அவர்கள் கூடியிருப்பது, இந்தியாவின் ஜனநாயக, அரசியலமைப்புப் பாரம்பரியத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்று கூறினார். மகாத்மா காந்தியைக் குறிப்பிட்ட அவர், அவரது வாழ்க்கை சத்தியம், அறம், அகிம்சை, சத்தியாகிரகம் ஆகியவற்றின் சக்தியை வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்டார். உலகின் பெரும்பகுதி காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஒரு காலகட்டத்தில், சத்தியம், அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம், சுதந்திரப் போராட்டத்திற்கு வழிகாட்ட முடியும் என்பதை மகாத்மா காந்தி காட்டியதாக அவர் குறிப்பிட்டார். அவரது கருத்துக்களும் தத்துவமும் பின்னர் உலகம் முழுவதும் நீதிக்கான இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்தன என்று அவர் கூறினார். மகாத்மா காந்தியின் போதனைகளை நினைவு கூர்ந்த அவர், இளைஞர்கள் அவரது வாழ்க்கையையும் கருத்துக்களையும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியைக் குறிப்பிட்டுப் பேசிய, திரு ஓம் பிர்லா அவரது எளிமை, நேர்மை, உயர்ந்த லட்சியங்கள், கடமையுணர்வு, முடிவெடுப்பதில் உள்ள உறுதி ஆகியவற்றை எடுத்துரைத்தார். சவாலான காலகட்டத்தில் தேசத்திற்கு வழிகாட்டிய சாஸ்திரியின் எழுச்சியூட்டும் "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற முழக்கத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்பதற்கு புதிய அர்ப்பணிப்புடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியலமைப்புச் சபை மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டு தமது உரையை நிறைவு செய்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் நிர்ணய சபை மண்டபத்தில் மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதைக் கண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 36 இளம் பங்கேற்பாளர்கள், அந்த இரு தேசியத் தலைவர்களின் வாழ்க்கை, லட்சியங்கள், சிந்தனைகள், பங்களிப்புகள் குறித்துப் பேசினர்.
முன்னதாக, இன்று காலை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ராஜ்காட், விஜய்காட் ஆகிய இடங்களுக்குச் சென்று, மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318220®=3&lang=1
(Release ID: 2318220)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2318303)
வருகையாளர் எண்ணிக்கை : 7