பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, கேப்டன் ஸ்மித் மாச்சாருடன் உரையாடினார்

பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அவரது துணிச்சலுக்கும் சமயோசித அறிவாற்றலுக்கும் பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 4:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.10.2026) கேப்டன் ஸ்மித் மாச்சருடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்து, அவர் குணமடைய நாடு முழுவதும் பிரார்த்தனை செய்வதாக உறுதியளித்து உரையாடலைத் தொடங்கினார். எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, ஒரு நொடியின் ஒரு பகுதிக்குள் முக்கியமான முடிவுகளை எடுத்த விமானியின் தைரியம், பொறுமை, சமயோசித புத்தி ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டினார். உயிருக்கும் மரணத்திற்கும் இடையே போராடி, கடுமையான காயங்களைச் சந்தித்த போதிலும், கேப்டன் தனது உயிரை விட பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளித்து, 140 கோடி நாட்டு மக்களின் கௌரவத்தை உயர்த்தி இருப்பதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியர்கள் உயிர்களை எடுப்பவர்கள் அல்ல, உயிர்களைக் காப்பாற்றுபவர்கள் என்று நாடு முழுவதும் பெருமையுடன் கூறலாம் என திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

 பூபேந்திர பாய், கீதா, சோனல் உள்ளிட்ட விமானியின் குடும்ப உறுப்பினர்களுடனான தமது உரையாடலை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். தனது மகனுக்கு ஆழமான கலாச்சார விழுமியங்களை ஊட்டியதற்காக கீதாவைப் பாராட்டிய பிரதமர், அவர் பகவத் கீதையின் போதனைகளை முழுமையாக உள்வாங்கி அதன்படி வாழ்வதையும் குறிப்பிட்டார்.

 

 விமானம் கீழே விழுந்து கொண்டிருப்பதை தனது 17 வருட விமான அனுபவம் எப்படி உணர வைத்தது என்பதை ஸ்மித் விவரித்ததைப் பிரதமர் கவனமாகக் கேட்டார். பயணிகள் கடுமையாகச் சிக்கி காயமடைந்திருந்தபோதிலும், அவர்கள் இறந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து, கடும் முயற்சி செய்த அந்தப் பயங்கரமான தருணத்தை விமானி விவரித்ததையும் அவர் கேட்டார். உயிர் பிழைப்பதற்கான தனது போராட்டத்தின்போது அனுமன் சாலிசாவை ஓதி ஆன்மீக வலிமையைப் பெற்றதாக கூறிய கேப்டனை அவர் பாராட்டினார்.  நீங்களும் உங்கள் குடும்பமும் உண்மையிலேயே தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

 

நாடு முழுவதும் பரவலாக நிலவும் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையை பிரதமர் சுட்டிக்காட்டினார். விமானியின் நீண்ட ஆயுளுக்காக சாவர்குண்ட்லாவிலிருந்து வத்வான் வரை சிறப்புப் பிரார்த்தனைகளும் ஆரத்திகளும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தனது உடல் நிலை குணமடைவதை ஒரு பொறுமையான பயணமாகக் கருதும் கேப்டனின் உறுதியை அவர் பாராட்டினார். மேலும், இந்தியக் கலாச்சாரத்துடன் இணைந்திருப்பதற்காக, அந்த விமானி தனது இரண்டு வயது மகனுடன் தினமும் அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்வதையும் அவர் பாராட்டினார். உள்ளூர் மக்களிடமிருந்து கிடைத்த அளவற்ற அன்பு குறித்த கேப்டனின் உணர்வை எதிரொலிக்கும் வகையில், சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். கேப்டனின் செயல்கள் உலக அளவில் அனைத்து இந்திய விமானிகளின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தி இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். "இன்று காந்தி ஜெயந்தி; அகிம்சையின் உண்மையான சாராம்சம் என்ன என்பதை நீங்கள் வாழ்ந்து காட்டியதன் மூலம் நிரூபித்துள்ளீர்கள்," என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

பிரதமர், கேப்டனின் இளம் குழந்தைகளான பாபி, ஜீவா ஆகியோரின் நலனை விசாரித்தவாறே, குஜராத்தி மொழியில் பாசத்துடன் உரையாடினார்.  ஒட்டுமொத்த நாடும் அவருடன் உறுதியாக நிற்கிறது என்பதை வலியுறுத்தியவாறே, அவர் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318213&reg=3&lang=1

 

(Release ID : 2318213)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2318275) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Odia , Telugu , Malayalam