சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியாவும் இத்தாலியும் முடிவு
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 6:23PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு புவனேஷ் குமார், இத்தாலியின் சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் இமானுவேலா திரிபி ஆகியோரின் தலைமையில், இரண்டாவது இந்தியா-இத்தாலி சுற்றுலா கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் இன்று (2026 செப்டம்பர் 29) காணொலி மூலம் நடைபெற்றது .
இந்தக் கூட்டத்தில், இந்தியத் தரப்பில் சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், ரோமில் உள்ள இந்தியத் தூதரகம், இந்திய சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இத்தாலி குழுவில், அந்நாட்டு சுற்றுலா அமைச்சகம், வெளியுறவு- சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம், புது தில்லியில் உள்ள இத்தாலியத் தூதரகம், இத்தாலி தேசிய சுற்றுலா வாரியம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, சுற்றுலாத் தரவுப் பரிமாற்றம், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல், திரைப்படச் சுற்றுலா, சுற்றுலாத் துறையில் திறன் மேம்பாடு, வணிகங்களுக்கு இடையிலான ஈடுபாட்டை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
அடையாளம் காணப்பட்ட செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், தொடர்புடையவர்களிடையே ஈடுபாட்டை வலுவாக்கவும், பிரத்யேக தொழில்நுட்பக் குழுக்களை அமைக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, சுற்றுலாப் பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டு (2027), இந்தியா–இத்தாலி கலாச்சார, சுற்றுலா ஆண்டு - 2027 என முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சுற்றுலா ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316607®=3&lang=1
----
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317186)
வருகையாளர் எண்ணிக்கை : 8