PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கடல்சார் இறையாண்மையை வலுப்படுத்தும் பாரத் கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 11:35AM by PIB Chennai

கண்ணோட்டம்:

​இந்தியாவிற்கு கடல்வழி இணைப்பு  என்பது வர்த்தகத்தின் முதுகெலும்பாகும். இது எரிசக்திப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்பதுடன், தேசியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி முதல் பொருட்கள் ஏற்றுமதி வரை, கடல்வழி இணைப்பு இந்தியாவின் பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறைக்கும் அடித்தளமாக அமைகிறது.

​இந்தியாவின் கடல்சார் வர்த்தகம் விரிவடைந்துள்ள போதிலும், முக்கிய கடல்சார் காப்பீட்டுச் சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு வழங்குநர்களையே சார்ந்து அமைந்துள்ளன. இது, காப்பீட்டுக் கட்டணங்களாக ஆண்டுதோறும் 45 முதல் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெளியேற வழிவகுக்கிறது.

​உள்நாட்டு கடல்சார் காப்பீட்டுத் திறனில் உள்ள இந்த இடைவெளிக்கு ஒரு தீர்வாக, பாரத் கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் 18 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2026 மே 12 அன்று முறையாகத் தொடங்கப்பட்ட இது, ரூ.13,906.50 கோடி மதிப்பிலான இந்தியாவின் முதல் உள்நாட்டு கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பாகும். இது ரூ.12,980 கோடி அரசு உத்தரவாத ஆதரவை உறுதி செய்கிறது. முதல் முறையாக, இந்திய நிறுவனங்கள் அதிக மதிப்பு கொண்ட கப்பல்களுக்குத் தன்னாட்சியுடன் காப்பீடு வழங்குகின்றன. இந்தக் காப்பீட்டு வரம்பானது கப்பல் கட்டமைப்பு, இயந்திரங்கள், அபாயகரமான பகுதிகளில் போர்ச் சூழல்களுக்கு எதிரான சரக்குகள் காப்பீடு, பாதுகாப்பு, இழப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

​கடல் சார்ந்த தேசம்:

​இந்தியா 12 பெரிய துறைமுகங்களையும், 217 சிறிய துறைமுகங்களையும் இயக்குகிறது. அவை நாடு முழுவதும் பல்வேறு வகையான சரக்குகளைக் கையாளுகின்றன. இந்தியாவின் பெரிய, சிறிய துறைமுகங்கள் 2025-26-ம் நிதியாண்டில் 1,668 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியுடனும் வர்த்தக விரிவாக்கத்துடனும் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

​நீண்ட கால நோக்கில், இந்த காப்பீட்டுக் கூட்டமைப்பு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் காப்பீட்டிற்கான ஒரு பிராந்திய மையமாக உருவெடுக்கும். நிதிச் சேவைகளை வழங்குபவராகவும், கடல்சார் அபாய விதிமுறைகளை வடிவமைக்கும் நாடாகவும் இந்தியா அங்கீகாரம் பெற்று வருகிறது. கப்பல் கட்டும் தொழில் விரிவடைந்து, துறைமுகங்கள் அதிக அளவிலான சரக்குகளைக் கையாளும்போது, இந்தியாவின் கடல்சார் லட்சியங்களுடன் சேர்ந்து இந்த காப்பீட்டுக் கூட்டமைப்பும் வளரும்.

​மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315489&reg=48&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315527) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati