PIB Backgrounder
azadi ka amrit mahotsav

உலக சுற்றுலா தினம் 2026 டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 2:34PM by PIB Chennai

உலக சுற்றுலா தினம் 2026 செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது.​"சுற்றுலாத் துறையை மறுவடிவமைக்கும் டிஜிட்டல் செயல்திட்டம், செயற்கை நுண்ணறிவு" என்ற கருப்பொருளுடன் இத்தினம் கொண்டாடப்படவுள்ளது. இது சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில், தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரங்களுக்கான முக்கிய ஆதாரமாக சுற்றுலாத் துறை உருவெடுத்து வருகிறது. 2023-24-ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.22 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளதுடன், 8.46 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கத்திற்கும் இத்துறை  உதவியுள்ளது.

​2025-ம் ஆண்டில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 428.55 கோடியை எட்டியது. அதே நேரத்தில், இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.53 கோடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருவாய் ரூ.2,76,831 கோடியாக அதிகரித்துள்ளது.

​மேலும், மின்னணு விசா (ஈ-விசா), இன்கிரெடிபிள் இந்தியா டிஜிட்டல் தளம், நிதி பிளஸ் ஆகியவற்றின் மூலம், இந்தியா டிஜிட்டல் சுற்றுலாவிற்கான சூழலமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

​செயற்கை நுண்ணறிவு, தனிப்பயனாக்கப்பட்ட, தடையற்ற பயண அனுபவங்களைச் சாத்தியமாக்குகிறது. டிஜிட்டல் புத்தாக்க நடவடிக்கைகளுடன், ஸ்வதேஷ் தர்ஷன் 2.0, பிரசாத், கப்பல் சுற்றுலா, சுற்றுலாத் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த உதவுவதுடன், பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்தி, வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான சுற்றுலாத் துறையை உருவாக்குவதற்கான, இந்தியாவின் முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

​சுற்றுலா, பலதரப்பட்ட மக்களையும், இடங்களையும், கலாச்சார உறவுகளையும் மேம்படுத்துகிறது. இது பல்வேறு சமூக மக்களின் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் கணிசமான அளவில் உதவுகிறது.

​உலகளவில், கடந்த 2024-ம் ஆண்டில், சுற்றுலாத் துறை 10.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதப் பங்களிப்பை அளித்துள்ளது. அதே நேரத்தில், 35.7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கத்திற்கும் உதவியுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் மூலம் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

​சுற்றுலா செல்லும் மக்களின் எதிர்பார்ப்புகள் மாறி வரும் நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், சுற்றுலாத் துறையை மறுவடிவமைக்கும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதுடன், திறன்களை வலுப்படுத்துவது, சுற்றுலா பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவது வரை, சுற்றுலாத் துறையை அறிவார்ந்ததாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதற்குச் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் உதவிடும்.

​மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315270&reg=3&lang=1

****

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315322) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam