பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை அடைவதற்கு உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பத் திறன் இன்றியமையாதது: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 7:34PM by PIB Chennai

பெங்களூருவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கே. ராம்மோகன் நாயுடு ஆகியோர் முன்னிலையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்திய விமானப்படைக்கு இரண்டு தேஜஸ் இலகுரக போர் விமானங்களின் 'இறுதி செயல்பாட்டு அனுமதி' பெற்ற இரு இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களையும், மூன்று ஹெச்டிடி -40 அடிப்படை பயிற்சி விமானங்களையும் வழங்கியது. மேலும், பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நான்கு 'துருவ்' அடுத்த தலைமுறை ஹெலிகாப்டர்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தற்சார்பு என்ற முக்கிய நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியதிலிருந்து, அதிநவீன உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருவதன் மூலம், பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது என்று கூறினார். பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்த அவர், "பொதுத்துறை நிறுவனங்கள் இத்துறையில் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் தனியார் துறையினரையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்," என்றும் குறிப்பிட்டார்.

சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த விண்வெளித் துறைத் திறன்களுக்கு இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பின் அடையாளமாக இந்த விழாவைக் குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், வலுவான விண்வெளித் துறையின் வளர்ச்சியைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதுடன் மட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார். சிவில் மற்றும் ராணுவ விமானப் போக்குவரத்துத் துறைகள் ஆகிய இரண்டின் தேவைகளையும் திறம்பட எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழலியலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  “அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற, ஒருங்கிணைந்த விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துச் சூழலியலை நாம் உருவாக்க வேண்டும். நமது கூட்டு வலிமையின் மூலம் இந்த முயற்சியில் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையை மிக முக்கியமான முன்னுரிமைப் பகுதியாகக் குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர், இன்றைய சூழலில் இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளுமாறு இளம் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை வலியுறுத்தினார். வரவிருக்கும் தசாப்தத்தில் உலகளாவிய விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்குத் தலைமைத்துவ இடத்தைப் பெற்றுத்தரும் வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளுமாறும் அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312215&reg=3&lang=1

***

TV/BR/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313550) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Kannada