மாநிலங்களவைச் செயலகம்
கேப்டவுனில் 69-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு: இந்தியக் குழு பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 8:06PM by PIB Chennai
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் செப்டம்பர் 12 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் 69-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு பங்கேற்றுள்ளது.
இக்குழுவில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. சி. சதானந்தன் மாஸ்டர், மக்களவை உறுப்பினர்கள் திருமதி. டி. புரந்தேஸ்வரி, திரு. விஷ்ணு தத் சர்மா, திரு. சுதீர் குப்தா, திரு. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி, திருமதி. ரச்சனா பானர்ஜி மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு. பி.சி. மோடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளைச் சேர்ந்த 32 அவைத் தலைவர்கள், 18 செயலாளர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
கேப்டவுன் சென்ற திரு. ஹரிவன்ஷ், தென்னாப்பிரிக்க தேசிய சட்டப்பேரவைத் தலைவர் திருமதி. ஏஞ்சலா தாக்சிசோலே டிடிசா, தேசிய மாகாணங்களுக்கான கவுன்சிலின் துணைத் தலைவர் திரு. பூபலன் கோவிந்தர் மற்றும் தேசிய சட்டப்பேரவை துணைத் தலைவர் திருமதி. அன்னெலி லோட்ரியட் ஆகியோரைச் சந்தித்து, நாடாளுமன்ற பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் இரு நாடுகளின் நாடாளுமன்ற உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மேலும், திருமதி. டி. புரந்தேஸ்வரி, காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் திறம்பட முன்வைத்தார். மாநாட்டில் சமகாலப் பிரச்சினைகள் குறித்து ஆறு முக்கியப் பணிமனைகள் நடைபெறுகின்றன. “காமன்வெல்த் நாடுகளுக்கான புதிய தலைமைத்துவ வாய்ப்புகள்: ஜனநாயகம் மற்றும் சர்வதேச சட்டத்தை வலுப்படுத்த நாடாளுமன்ற நடவடிக்கை” என்ற தலைப்பில் திரு. ஹரிவன்ஷ் மாநாட்டின் பொதுக்குழுவில் உரையாற்றுகிறார்.
இந்தியக் குழு உறுப்பினர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் அவைத் தலைவர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளுடன் இணைந்து பல்வேறு பணிமனைகள், பொதுக்குழு அமர்வுகள் மற்றும் விவாதங்களில் பங்கேற்கின்றனர். காமன்வெல்த் நாடுகளிடையே நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஒத்துழைப்பு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதுடன், இந்தியா–தென்னாப்பிரிக்கா நாடாளுமன்ற உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் இப்பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310643®=3&lang=1
***
TV/VK/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311296)
வருகையாளர் எண்ணிக்கை : 30