PIB Backgrounder
அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் 9-வது தேசிய ஊட்டச்சத்து மாதம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 5:05PM by PIB Chennai
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே ஊட்டச்சத்து, நல்வாழ்வு, சுகாதாரப் பழக்கவழக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 2026 செப்டம்பர் 9 அன்று தொடங்கப்பட உள்ள 9-வது தேசிய ஊட்டச்சத்து மாதம், அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு சவாலை எதிர்கொள்ள 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து இயக்கம் (போஷன் அபியான்), தற்போது மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து 2.0 இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 9-வது தேசிய ஊட்டச்சத்து மாதம், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேசக் கூட்டரங்கில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதன்மைக் கருப்பொருளாக "நமது அங்கன்வாடி நமது பொறுப்பு" என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஊட்டச்சத்து மாதம் 5 முக்கிய முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. சரிவிகித உணவு, போதுமான புரதச்சத்து உட்கொள்ளலை அதிகரித்தல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உள்ளூர் உணவுப் பொருட்களைக் கொண்டு அங்கன்வாடி மையங்களில் சமைக்கப்பட்ட சூடான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்குதல் ஆகியவை இதில் முதன்மையானவை. புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி மேலாண்மைக் குழுக்கள், உணவுப் பட்டியல் பலகைகள் மூலம் சமூகப் பங்களிப்பையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்தல், ஆரம்பக்கால குழந்தைப் பராமரிப்பு, கல்வியின் அடிப்படைத் தூணாக அறிவாற்றல் வளர்ச்சி, ஊட்டச்சத்தை இணைத்தல் ஆகியவையும் இதில் அடங்கும். இத்துடன் தாய்மார்களின் ஊட்டச்சத்து ஆதரவுக்கான பிரதமரின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதும் முக்கியக் குறிக்கோளாகும்.
உணவுப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க அங்கன்வாடி மையங்களில் நேரடி சமையல் செயல்முறை விளக்கங்கள், ஊட்டச்சத்து கண்காட்சிகள், புரதச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அங்கன்வாடி மையங்களில் வாராந்திர உணவுப் பட்டியல் சுழற்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சமைத்த உணவுகளின் தரம் பரிசோதிக்கப்படும். 2026 ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அமைக்கப்பட்ட அங்கன்வாடி மேலாண்மைக் குழுக்கள், சேவை வழங்கலைக் கண்காணித்து சமூகத் தணிக்கையை மேற்கொள்ளும். உணவுக் குறிப்பு பலகைகள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்.
குழந்தைகளின் 85 சதவீத மூளை வளர்ச்சி முதல் 6 வயதுக்குள், குறிப்பாக முதல் 1,000 நாட்களில் நடைபெறுகிறது. எனவே வீட்டிற்குச் சென்று பார்வையிடும் திட்ட அட்டவணை மூலம் 0 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் 34 முக்கிய வளர்ச்சிப் படிநிலைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். குழந்தைகளுக்கான நவ்சேத்னா, ஆதார்ஷிலா பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுவர். கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளையும் 100 சதவீதம் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, நேரடிப் பலன் பரிமாற்றம் விரைவுபடுத்தப்படும்.
ஊட்டச்சத்து நிர்வாகத்தை எண்ம முறையில் கண்காணிக்க 2021 மார்ச் 1 அன்று தொடங்கப்பட்ட போஷன் டிராக்கர் தளம், அங்கன்வாடி சேவைகளை உடனுக்குடன் கண்காணிக்கும் முக்கியக் கருவியாக விளங்கி வருகிறது. 2026 ஜூலை 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 13.99 லட்சம் அங்கன்வாடி மையங்கள், 13.30 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் சுமார் 8.94 கோடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான 7.2 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும், சுமார் 1.1 கோடி கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களும் பயனடைந்து வருகின்றனர். நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு, மக்கள் இயக்கம் ஆகியவற்றின் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாடற்ற ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307886®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310878)
வருகையாளர் எண்ணிக்கை : 17