PIB Backgrounder
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் - இந்தியாவின் தலைமைத்துவத்தில் வலுவடையும் ஒத்துழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 12:43PM by PIB Chennai

நான்கு நாடுகளின் உரையாடலில் தொடங்கி, இன்று நான்கு கண்டங்களில் பரவியுள்ள ஒரு புவிசார் அரசியல் கூட்டமைப்பாக பிரிக்ஸ் மாறியுள்ளது. அடுத்தடுத்த உறுப்பினர் சேர்க்கையில், எண்ணெய் வளம் மிக்க நாடுகள், ஆப்பிரிக்கப் பொருளாதாரங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் இதில் இணைந்தன. இந்த விரிவடைந்து வரும் கட்டமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பில், இந்தியா இந்த ஆண்டு அமர்ந்துள்ளது. கூட்டமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா இதற்கு தலைமை ஏற்பது இது நான்காவது முறையாகும்.

வளர்ந்து வரும் பொருளாதாரங்களிடையே பொருளாதாரக் கொள்கையை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முக்கிய தளமாக பிரிக்ஸ் உருவெடுத்துள்ளது. உலகளாவிய ஆளுகை குறித்து இந்த நாடுகள் ஒரு பொதுவான நிலைப்பாட்டை உருவாக்கும் முதன்மை மன்றமாக இது செயல்படுகிறது. இதன் செயல்திட்டம் வளர்ச்சி, நிதி, தொழில்நுட்பம், வர்த்தகம், மக்கள் பரிமாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அமைப்பு, உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் அதிகரித்து வரும் பொருளாதார வலிமையையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது.

2026-ம் ஆண்டுக்கான தனது தலைமைத்துவத்தின் கீழ், இந்தியா 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை 2026 செப்டம்பர் 12,13 தேதிகளில் புது தில்லியில் நடத்த உள்ளது. இந்தியாவின் தலைமைத்துவமானது, மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையைக் கட்டமைத்தல் என்ற கருப்பொருளால் வழிநடத்தப்படுகிறது. இந்தக் கருப்பொருள், தற்போதுள்ள சாதனைகளையும், செயல்திறனையும் வலுப்படுத்துவதில் இந்தியாவின் கவனத்தைப் பிரதிபலிக்கிறது. இது வளர்ச்சி, நிலைத்தன்மை, புத்தாக்கம் ஆகியவற்றை செயல்திட்டத்தின் மையத்தில் வைக்கிறது.

இப்போது பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் உள்ளன . கூட்டாக, இந்த உறுப்பு நாடுகள் உலக மக்கள்தொகையில் 49.5%, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40%, உலகளாவிய வர்த்தகத்தில் 26% ஆகியவற்றைக் கொண்டுள்ளன . இந்தப் புள்ளிவிவரங்கள் அவற்றின் கணிசமான மக்கள்தொகையையும் பொருளாதார வலிமையையும் எடுத்துக் காட்டுகின்றன.

சர்வதேச பிரச்சினைகள் குறித்த உரையாடலுக்கான ஒரு மன்றமாகவே பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் இருந்தது. உலகளாவிய அரசியல், பொருளாதார விஷயங்களில் பொதுவான நிலைப்பாடுகளை உருவாக்குவதே அதன் ஆரம்பகாலக் கவனமாக இருந்தது. காலப்போக்கில், இந்த முன்னுரிமைகள் உறுப்பினர்களிடையே ஆழமான, பரந்த ஈடுபாட்டிற்கு ஒரு அடித்தளத்தை வழங்கியுள்ளன.

தொடர்ச்சியான உச்சிமாநாடுகளில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு படிப்படியாக விரிவடைந்துள்ளது. அதன் செயல்திட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பு, பருவநிலை மாற்றம், உணவு, எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம் ஆகியவை வந்தன. இவை உலகளாவிய நிர்வாகத்தை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், திறம்பட்டதாகவும், தற்கால சவால்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு அரசியல் ஒத்துழைப்பு மன்றமாக, பிரிக் (BRIC) 2006-ல் முறையாக நிறுவப்பட்டது . தென்னாப்பிரிக்கா 2011-ல் ஒரு முழு உறுப்பினராகச் சேர்ந்ததன் மூலம் , பிரிக் அமைப்பு பிரிக்ஸ் (BRICS) என மாறியது. 2024 ஜனவரியில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இதில் உறுப்பினர்களாகின. இந்தோனேசியா 2025 ஜனவரியில் பதினோராவது உறுப்பினராக இணைந்தது. இந்த இணைப்புக்கள் பிரிக்ஸின் புவியியல், பொருளாதாரப் பரவலைக் கணிசமாக விரிவுபடுத்தின. இந்த விரிவாக்கத்துடன், ' கூட்டாளர் நாடு' என்ற ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது . 2025-ம் ஆண்டில் பெலாரஸ், ​​பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் ஆகிய பத்து நாடுகள் இந்தக் கட்டமைப்பில் இணைந்தன. இந்தப் புதிய ஏற்பாடு, பிரிக்ஸுடன் கட்டமைக்கப்பட்ட ஈடுபாட்டிற்கு ஒரு கூடுதல் வழியை வழங்குகிறது.

கூட்டாளர் நாடு கட்டமைப்பு, பிரிக்ஸின் முழு உறுப்பினர் அமைப்பை மாற்றாமல் அதன் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்துகிறது. இது ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, யூரேசியா முழுவதும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வலுப்படுத்துகிறது.  

பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பதவி, அதன் சுருக்கப்பெயரில் உள்ள எழுத்துக்களின்படி ஆண்டுதோறும் சுழற்சி முறையில் அமைகிறது. ஒவ்வொரு தலைமைப் பதவிக் காலமும் அந்தந்த ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைகிறது. தலைமைப் பதவியை வகிக்கும் நாடு, அந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலின் முன்னுரிமைகளை நிர்ணயிக்கிறது.

இந்த ஆண்டுக்கு முன்பு, இந்தியா 2012, 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பிற்குத் தலைமை தாங்கியுள்ளது. ஒவ்வொரு தலைமைப் பதவியும் அந்தந்த காலகட்டத்தின் முன்னுரிமைகளையும் சவால்களையும் பிரதிபலித்தது. இந்தியாவின் தொடர்ச்சியான தலைமை, இந்த அமைப்புடனான அதன் நீடித்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. மேலும், இது ஆக்கப்பூர்வமான பன்முகத்தன்மை, வளரும் பொருளாதாரங்களின் முன்னுரிமைகள் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைப் பதவி, குறிப்பிடத்தக்க உலகளாவிய மாற்றங்கள் நிகழும் ஒரு காலகட்டத்தில், அமைந்துள்ளது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பானது, தற்போதுள்ள வழிமுறைகளின் செயல்திறனை வலுப்படுத்தும் அதே வேளையில், பல்வேறு உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும் முயல்கிறது. மேலும் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய ஒழுங்கிற்கான ஒரு ஆக்கப்பூர்வமான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308611&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2310775) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali