குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தென்னை நார் தொழில்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 2:07PM by PIB Chennai
தென்னை மட்டையிலிருந்து தொடங்கும் தேங்காய் நார், இந்தியாவின் தென்னை விளையும் பகுதிகளில் வாழ்வாதாரத்திற்கான ஒரு ஆதாரமாக மாறி வருகிறது. இயற்கையான, நீடித்து உழைக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த நார் வகையான தேங்காய் நார், பல தலைமுறைகளாகவே இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இப்போது, தொழில்முனைவோர் அதை பாய்கள், கயிறுகள் முதல் கைவினைப் பொருட்கள், உயிரி உரங்கள், புதுமையான பேக்கேஜிங் தீர்வுகள் வரையில் பல வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக அதிக அளவில் மாற்றி வருகின்றனர். இந்த மாற்றத்தின் பின்னணியில், ஒரு பாரம்பரியச் செயல்பாட்டை நவீன வாழ்வாதாரமாக மாற்றும் ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழில்முனைவோரும் கைவினைஞர்களும் உள்ளனர்.
மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் ஆதரவுடன், தென்னை நார் வாரியமானது, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மூலம் இதை உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு பாதையாக மாறி வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம், கடியத்தில், செல்வி அல்லம் கௌதமி தென்னை நார் கழிவுகளைக் கொண்டு தொழில் செய்யும் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை தொடங்கினார். அவர் தவாலேஸ்வரத்தில் உள்ள தென்னை நார் வாரிய பயிற்சி மையத்தில் சிறப்புப் பயிற்சி பெற்று, ₹6.50 லட்சம் வங்கிக் கடன் உதவியுடன், ₹10 லட்சம் திட்டச் செலவில் 2024-25-ம் ஆண்டில் அடிகோ காயர் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த கால்மிதி விரிப்புகள், கயிறுகள், அலங்காரப் பொம்மைகள், கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இந்த நிறுவனம் ஆண்டுக்குச் சுமார் ₹35 லட்சம் வருவாயையும், ஏறத்தாழ ₹10 லட்சம் லாபத்தையும் ஈட்டியுள்ளதுடன், ஆறு பெண்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் அவரது சொந்த நிறுவனத்தையும் தாண்டி விரிந்துள்ளது. அவர் சுமார் 120 பெண்களுக்குத் தென்னை நார் பாய் நெசவு, கயிறு தயாரித்தல், கைவினைப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் பயிற்சி அளித்து, அவர்கள் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளார்.
இதேபோல் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திரு பி. சுரேந்திரன் கோழிக்கோட்டில் சம்பூர்ணா பிளஸ் அக்ரோ ஃபெர்டிலைசர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நிறுவினார். கண்ணூர் தென்னை நார் வாரியம், கலவூரில் உள்ள மத்திய தென்னை நார் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பயிற்சியுடனும் தொழில்நுட்ப ஆதரவுடனும் தென்னை நார் கழிவு உயிர் உரத்தை அவர் உற்பத்தி செய்யத் தொடங்கினார்.
வெறும் ஓராண்டில் அவரது நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 20 டன்களுக்கும் அதிகமான உயிர் உரத்தை விற்பனை செய்து 2024-25-ம் நிதியாண்டில் ₹13 லட்சம் வருவாயையும் ₹4 லட்சம் லாபத்தையும் அந்த நிறுவனம் ஈட்டியுள்ளது.
தென்னை நார் இந்தியாவின் மிகப் பழமையான இயற்கை நார்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட தென்னை நார் உற்பத்தி, 1859-ம் ஆண்டு கேரளாவின் ஆலப்புழாவில் முதல் தென்னை நார் தொழிற்சாலை நிறுவப்பட்டதன் மூலம் தொடங்கியது. அன்று முதல், இத்துறை தென்னை உற்பத்திப் பகுதிகளில் வளர்ந்துள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய தென்னை நார் உற்பத்தியாளராக உள்ளதுடன், உலகளாவிய தென்னை நார் உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. திறன்கள், நிதி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சந்தை ஆதரவுடன், இந்தியாவின் பாரம்பரிய கயிறுத் துறை, உள்ளூரில் கிடைக்கும் வளங்களை, தொழில்முனைவுக்கான வாய்ப்புகளாக மாற்றி சீராக முன்னேறி வருகிறது.
மேலும் தகவல்களுக்கு, https://coirboard.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310033®=3&lang=1
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2310481)
வருகையாளர் எண்ணிக்கை : 10