புவி அறிவியல் அமைச்சகம்
உள்நாட்டு கடல்சார் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அதிநவீன கடல்சார் ஆய்வுக்கப்பலான சாகர் மந்தன் கப்பலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 12:56PM by PIB Chennai
கடல்சார் அறிவியல், தொழில்நுட்பத் துறையில், இந்தியாவின் தற்சார்புப் பயணத்தில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சாகர் மந்தன் (யார்டு 3041) என்று பெயரிடப்பட்ட அதிநவீன ஆய்வுக்கப்பல், கொல்கத்தாவில் உள்ள ரிஷி பங்கிம் கப்பல் கட்டும் தளத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துருவ, ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்திற்காக, பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலை, மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
கடற்படையின் மரபுப்படி, அவரது துணைவியார் திருமதி மஞ்சு சிங் இந்தக் கப்பலுக்கு முறைப்படி பெயரிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் டி ஸ்ரீனிவாச குமார், அவரது துணைவியார் திருமதி கவிதா எல்லண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை என்று குறிப்பிட்ட அமைச்சர், உலக அளவில், கடல்சார் அரசியல், தற்சார்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தக் கப்பலை வடிவமைத்து, தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு ஆண்டுகளில், கப்பலின் அடித்தளக் கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே இதற்கான பணிகளை மேற்கொண்ட பொறியாளர் குழுவினக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
இது அவர்களின் சிறப்பான செயல்திறனுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும; : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308170®=3&lang=1
----
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2308426)
வருகையாளர் எண்ணிக்கை : 7