பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேலோ இந்தியா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 1:35PM by PIB Chennai

வணக்கம்.

கேலோ இந்தியா  உரையாடல் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொழில்நுட்பம் மூலம் இந்நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் மத்திய அமைச்சரவைச் சகோதரர்கள், அனைத்து முதலமைச்சர்கள், பல்வேறு மாநில அமைச்சர்கள், நாடாளுமன்றச் சகோதரர்கள் மற்றும் 'எனது பாரதம்' அமைப்பின் லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து விளையாட்டு வீரர்களும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நண்பர்களே, நீங்கள் அனைவரும் அறிந்ததே...

இன்னும் இரண்டு நாட்களில், ஆகஸ்ட் 29-ம் தேதி, தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது முன்கூட்டிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள், தாய்நாட்டின் சிறந்த புதல்வர்களில் ஒருவரான மேஜர் தியான் சந்த் அவர்களை நினைவுகூரும் நாளாகவும் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய ராணுவத்தின் ஹாக்கி அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணியில் மேஜர் தியான் சந்த் அவர்களும் இடம்பெற்றிருந்தார். அந்தப் பயணம், இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நூறு ஆண்டுகால விளையாட்டு உறவுக்கு அடித்தளமிட்டது. சில நாட்களுக்கு முன்பு நான் நியூசிலாந்துக்குச் சென்றிருந்தேன். அங்கும் மேஜர் தியான் சந்த் அவர்களை நினைவுகூர்ந்தேன். மேஜர் தியான் சந்த் அவர்கள் அடித்தளமிட்ட இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் இந்தியா இன்று தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

இந்த ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து, இந்தியாவின் விளையாட்டுத் துறை குறித்த தொலைநோக்குப் பார்வையை நாட்டின் முன் வைத்தேன். விளையாட்டைப் பற்றி நான் பேசும்போது, அது பதக்கங்களை வெல்வது மட்டுமே அல்ல. இந்தியாவின் விளையாட்டுத் திறனையும், இந்திய இளைஞர்களின் ஆற்றலையும் ஒன்றிணைத்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு இயக்கமாகும். நான் எப்போதும் கூறி வருகிறேன்  “யார் விளையாடுகிறார்களோ, அவர்கள் வளர்ச்சி பெறுவார்கள்.” விளையாட்டில் வளர்ச்சி பெறுவது என்பது களத்தில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. விளையாட்டின் மூலம் ஒருவருடைய ஆளுமை வளர்கிறது; குடும்பத்தின் வளர்ச்சி ஏற்படுகிறது; நாட்டின் பெருமையும் உயர்கிறது.

 நண்பர்களே,

ஒரு விளையாட்டு வீரர் வெற்றி பெறும்போது, அந்த வெற்றி அவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குகிறது; குடும்பத்தின் மதிப்பையும் பெருமையையும் உயர்த்துகிறது. அவர் படித்த பள்ளி மற்றும் கல்லூரியின் பெருமையும் அதிகரிக்கிறது. அவர் சேர்ந்த மாவட்டம் மற்றும் மாநிலத்தின் அடையாளமும் மேலும் வலுப்பெறுகிறது. அதாவது, அந்த விளையாட்டு வீரரின் பெயரைக் கொண்டு, அவர் வாழ்ந்த நகரம் அல்லது மாநிலத்தை உலகம் அடையாளம் காணத் தொடங்குகிறது. இதுபோன்ற பல வெற்றிகள் ஒரு குறிப்பிட்ட பகுதியை உலக விளையாட்டு வரைபடத்தில் பிரகாசிக்கச் செய்யும்போது, அந்த நகரத்தைப் பற்றிய உலகத்தின் பார்வையும் மாறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில், நாட்டின் நூற்றுக்கணக்கான மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நம்முடன் இணைந்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உலக விளையாட்டு வரைபடத்தில் பிரகாசிக்கும் திறன் உள்ளது. இந்த வலிமையைப் புரிந்துகொண்டு, இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நண்பர்களே,

இந்த முறை செங்கோட்டையில் இருந்து, விளையாட்டுத் துறை தொடர்பான மிகப்பெரிய சவால் குறித்தும் நாட்டின் கவனத்தை ஈர்த்தேன். இந்தச் சவால் ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடையது. கசப்பான உண்மை என்னவென்றால், ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் பல்வேறு விளையாட்டுகளில், இந்திய அணிகள் பாதி விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்கின்றன. அதாவது, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் பல விளையாட்டுகளில் நாம் போட்டியிடுவதே இல்லை. இந்த நிலை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 13 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றது. 20-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் இந்தியாவின் பங்கேற்பு இல்லை. மேலும், அந்த 20-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பலவற்றின் பெயர்களைக் கூட நம் நாட்டில் உள்ள மக்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மற்ற நாடுகள் அந்த விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று வருகின்றன. ஆனால் நாம் அந்த விளையாட்டுகளில் பங்கேற்பதே இல்லை. நமது பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், அந்த விளையாட்டுகளிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். உதாரணமாக, அலைச்சறுக்கு விளையாட்டு மற்றும் விளையாட்டு மலை ஏறுதல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். நம்மிடம் மிகப்பெரிய கடற்கரைப் பகுதி உள்ளது. அதேபோல், பரந்த மலைப் பகுதிகளும் உள்ளன. எனவே, இந்த விளையாட்டுகளில் இயல்பாகவே ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் நமக்கு உள்ளன. நீர் விளையாட்டுகள் மற்றும் குளிர்கால விளையாட்டுகளுக்கு ஏற்ற மக்கள் வளமும், புவியியல் அமைப்பும் நம்மிடம் உள்ளன. இருந்தபோதிலும், உலக அளவில் நடைபெறும் இதுபோன்ற விளையாட்டுகளில் நாம் இன்னும் போதுமான அளவில் காணப்படவில்லை. எனவே, குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கான முழுமையான சூழலை உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் எந்தெந்த மாவட்டங்களில் உள்ளன என்பதை நாம் ஆராய வேண்டும். இதில் இன்றைய நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

நண்பர்களே,

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்பைப் பற்றி நாம் பேசும்போது, நமது கவனம் எப்படியிருக்க வேண்டும் என்றால், 2036-ம் ஆண்டு பல்வேறு விளையாட்டுகளில் தகுதி பெற்று போட்டியிடவுள்ள வீரர்களை இன்றே நாம் தயார்படுத்த வேண்டும். அதனால்தான், 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளில் விளையாட்டுத் திறமை கொண்டவர்களை அடையாளம் காணும் வகையில், மிகப்பெரிய திறன் தேடல் இயக்கத்தை செங்கோட்டையில் இருந்து நான் அறிவித்தேன். இதிலும், எந்தக் குழந்தைக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது என்பதை மட்டும் நாம் பார்க்கக் கூடாது. எந்தக் குழந்தை எந்த விளையாட்டுக்கு ஏற்ற உடல் தகுதியைக் கொண்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். அதற்கேற்ப அந்தக் குழந்தைக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், உங்களுக்கு தேவையான எந்த உதவியாக இருந்தாலும், அரசின் தரப்பில் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்றும், அரசு உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று செயல்படும் என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவில் 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற நவீன விளையாட்டுச் சூழலை உருவாக்குவதில் நமது அரசு முழுமையான உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இன்று, விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதல் நவீன பயிற்சி மையங்கள் வரை, திறமைகளை அடையாளம் காண்பது முதல் அவர்களை உலக அரங்கிற்கு அழைத்துச் செல்வது வரை, ஒவ்வொரு நிலையிலும் தேவையான ஆதரவு கிடைக்கும் வகையில் நாட்டில் ஒரு முழுமையான அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு அறிவியல், பயிற்சி முறைகள், பயிற்றுவிப்பு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, உலகின் பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்பையும் நாம் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்.

நண்பர்களே,

விளையாட்டுத் துறையில் அரசு எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 'கேலோ இந்தியா கலந்துரையாடல்' என்பது விளையாட்டு பற்றிப் பேசுவதற்கான ஒரு சாதாரண நிகழ்ச்சி மட்டுமல்ல; இது நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் புதிய திசையைக் காட்டக்கூடிய ஒரு மேடையாகும். மேலும், இங்கு நடைபெறும் இளைஞர்களின் கலந்துரையாடல், உங்களின் எண்ணங்களையும் லட்சியங்களையும் நாட்டின் கனவுகளுடன் இணைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு, திறமை மேம்பாடு, நிர்வாகம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் ஆலோசனைகள் என்ன என்பதை இந்நிகழ்ச்சி செவிமடுத்துக் கொள்கைக் செயல்பாடுகளில் சேர்க்கும். எனவே, இந்த மேடையை உங்களால் முடிந்தவரை முழுமையாகப் பயன்படுத்தி, புதிய யோசனைகளை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர் சக்தியின் இந்த புதிய யோசனைகளே 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைவதற்கான பலமாக மாறும்.

நண்பர்களே,

ஆரோக்கியமான சமூகத்திற்கும், சிறந்த குடும்ப முறைக்கும், சிறப்பான பணி கலாச்சாரம் மற்றும் சூழலுக்கும் 'விளையாட்டு வீரரின் மனப்பான்மை' மிகவும் அவசியமானது என்று நாம் அடிக்கடி கேட்கிறோம். விளையாட்டு மைதானத்திற்குச் செல்லாமல் இந்த மனப்பான்மையைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினம். விளையாட்டு நமக்கு சாம்பியன்களாக மாறுவதை மட்டும் கற்றுக்கொடுக்காமல், சிறந்த போட்டியாளர்களாக மாறவும் கற்றுக்கொடுக்கிறது. எழுவது, விழுவது, விழுந்தபின் மீண்டும் எழுவது என இந்த மனப்பான்மையை விளையாட்டு நமக்குள்ளே ஏற்படுத்துகிறது.

நண்பர்களே,

விளையாட்டு எவ்வாறு வாழ்க்கையை மாற்றுகிறது என்பதற்கு நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களே ஒரு சிறந்த உதாரணமாகும். களத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களைப் பார்க்கும்போது, வாழ்க்கை பற்றிய ஒருவரின் பார்வையே மாறிவிடுகிறது. அவர்கள் எதையாவது சாதிக்கும்போது, அந்த வீரருடன் சேர்த்து அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரு புதிய வாழ்க்கை கிடைக்கிறது. தங்கள் குழந்தை ஆரம்ப காலத்தில் சிரமப்படுவதைக் கண்ட பெற்றோர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் - அவர்களுக்கு, அந்த மாற்றுத்திறனாளி வீரரின் வெற்றி அவர்களின் கனவுகளுக்கும் தைரியத்திற்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தருகிறது.

நண்பர்களே,

நான் எப்போதும் இத்தகைய வீரர்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். உதாரணமாக, வில்வித்தையில் நமது மகள், ஒரு அற்புதமான வீராங்கனை, அவர் பெயர் உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஷீத்தல். அவர் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றபோது, ஜம்மு-காஷ்மீர் முழுவதிலும், இந்தியா முழுவதிலும் பெருமிதம் பொங்கியது. அதேபோல், பாராலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கங்களை வென்ற நமது மகள் அவனி லேகாரா. நான் மகள் அவனியைச் சந்திக்கும் போதெல்லாம் பெருமிதம் கொள்கிறேன். அது சுமித் அண்டில் ஆகட்டும், நிதேஷ் குமார் ஆகட்டும், அல்லது சமீபத்தில்கூட நீங்கள் நமது ஜந்து குமாரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம். இத்தகைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், அத்தகைய தோழர்கள் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள்.

நண்பர்களே,

சிறந்த வாழ்க்கைக்கான உத்திரவாதம் விளையாட்டு. விளையாட்டு நம்மைச் சிறந்த முறையில் வாழத் தகுதிபெறச் செய்கிறது, நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. பௌஜா சிங்ஜியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடந்த ஆண்டு, நூறு வயதுக்கு மேற்பட்ட வயதில் பௌஜா சிங்ஜி காலமானார். விளையாட்டின் மீதான ஈடுபாடு, உடற்தகுதி - இவை எவ்வாறு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது என்பதற்குப் பௌஜா சிங்ஜி ஒரு சிறந்த உதாரணமாக விளங்கினார். விளையாட்டும் வாழ்க்கைத் தரமும் எவ்வாறு தொடர்புடையவை என்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

நண்பர்களே,

விளையாட்டின் மற்றொரு மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு போதைப்பொருள் மற்றும் போதையில் இருந்து விலகி இருப்பதற்கான மன உறுதி உருவாகிறது. இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் இக்காலகட்டத்தில், விளையாட்டுகள் இதில் மிகச்சிறந்த மற்றும் அர்த்தமுள்ள பங்கு வகிக்கின்றன.

நண்பர்களே,

இன்று இந்தியாவில் விளையாட்டுத் துறை ஒரு சிறந்த தொழிலாக உருவெடுத்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டு மீதான சமூகத்தின் பார்வை மாறியுள்ளது. இன்று நீங்கள் பார்க்கலாம், நமது நாட்டு மக்கள் ட்ரையாத்லான் (Triathlon) போட்டிகளில் பங்கேற்கிறார்கள், 5 கி.மீ மற்றும் 10 கி.மீ ஓட்டப்பந்தயங்களில் ஓடுகிறார்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து 'ஹைராக்ஸ்' போன்ற சவால்களை நிறைவு செய்கிறார்கள். யாரோ ஒருவர் முதன்முறையாகத் தலைகீழாக நிற்பதை கொண்டாடுகிறார்கள், மற்றும் சிலர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிக்கல்பால் மற்றும் பேட்மிட்டன் விளையாடுகிறார்கள். இவை சிறிய விஷயங்களாகத் தோன்றலாம், ஆனால் இவற்றை ஒரு பெரிய கோணத்தில் பார்த்தால், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் காண முடியும்.

விளையாட்டு இப்போது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருவதுதான் அந்த மாற்றமாகும். படிப்புக்கும் தொழிலுக்கும் கால அட்டவணை தயாரிக்கப்படுவது போல, தினசரி வழக்கத்திலும் விளையாட்டுக்கு இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தினால்தான், இந்தியாவின் விளையாட்டு எதிர்காலம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

நண்பர்களே,

நாட்டில் ஒரு விளையாட்டு கலாச்சாரம் என்பது சாதாரண மக்களும் அதனுடன் இணைக்கப்படும்போது மட்டுமே உருவாகிறது. பள்ளிகள் விளையாட்டு வகுப்புகளை இணைப் பாடமாக அல்லாமல், வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதும்போது இது சாத்தியமாகும். இது நிகழும் போது திறமையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, மேலும் விளையாட்டைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்க விரும்பும் குழந்தைகளுக்கு அவர்களின் குடும்பங்களின் ஆதரவும் கிடைக்கிறது. அதனால்தான் நான் சொல்கிறேன் - திரைகளை விட விளையாட்டு மையங்கள் மிகவும் முக்கியமானவை. ப்ளே ஸ்டேஷனை விட விளையாட்டு மைதானமே முக்கியமானது. உங்கள் இளைய தோழர்கள் அனைவரும் இந்த அணுகுமுறையை முன்னோக்கிச் செல்லும்போது மட்டுமே இது நடக்கும்.

நண்பர்களே,

இளைஞர் சக்தியின் திறமை மற்றும் வெற்றி மீது எனக்கு மாபெரும் நம்பிக்கை உள்ளது. நாட்டின் ஒவ்வொரு இளைஞரிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் - விளையாட்டு மைதானத்திலாகட்டும் அல்லது சமூகத்திலாகட்டும், உங்களின் பங்களிப்பே இந்தியாவின் பலமாகும். உங்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தால், அதனுடன் இணைவதற்கான பல வழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போது புதிய விளையாட்டு உபகரணங்கள் வந்துள்ளன, புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. பயிற்சி மற்றும் கோச்சிங் முறைகள் மாறிவிட்டன. விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், போட்டித்தன்மை மற்றும் ஒழுக்க நெறிகளின் தேவைகள் மாறியுள்ளன.

உபகரண வடிவமைப்பு, விளையாட்டுத் தொழில்நுட்பம், விளையாட்டு மருத்துவம், ஊட்டச்சத்து, உளவியல், பகுப்பாய்வு என இந்த அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்புகளை நீங்கள் தவறவிடக் கூடாது. எனவே, இந்தக் கலந்துரையாடலில் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். இளைஞர் சக்தியின் இந்தத் தீவிரமான பங்களிப்பே 'வளர்ச்சியடைந்த இந்தியா'வின் மிகப்பெரிய பலமாகும்.

இளைய தோழர்கள் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை  தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

வந்தே மாதரம்!

 

(Release ID: 2303680)

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2307878) வருகையாளர் எண்ணிக்கை : 13