உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28-வது கூட்டம் கோவாவில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 4:42PM by PIB Chennai
மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28-வது கூட்டம் கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் & டையூ நிர்வாகி திரு பிரஃபுல் கே படேல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா, மேற்குப் பிராந்தியம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார, தொழில்துறை, நிதிசார் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீதப் பொருளாதார வளர்ச்சிக்கு இப்பிராந்தியத்தின் பங்களிப்பு அளப்பரியது என்று பாராட்டினார்.
வளங்கள், ஏற்றுமதி, புத்தாக்க நிறுவனங்கள், சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான எந்திரமாக மேற்குப் பிராந்தியம் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். மகாராஷ்டிரா 33,872 புத்தாக்க நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளதுடன், குஜராத்தின் முந்த்ரா, தீன்தயாள் துறைமுகங்கள் சரக்குகள் கையாளுவதில் முன்னணியில் உள்ளதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால நிர்வாகத்தில், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மண்டல கவுன்சில்களின் கூட்டங்கள் 25 முறை மட்டுமே நடைபெற்ற நிலையில், 2014-க்குப் பிறகு 71 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை விவாதிக்கப்பட்ட 1,893 பிரச்சினைகளில் 1,445 பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மண்டல கவுன்சில்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் தளமாக மட்டுமின்றி, மக்கள் நலத்திட்டங்களைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்குப் பிராந்திய மாநிலங்களுக்கிடையே தற்போது எவ்வித எல்லைப் பிரச்சனைகளும் இல்லை என்பது ஒரு மகத்தான சாதனை என்று கூறிய அவர், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் களைதல், புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் ஆகியவற்றில் மேற்கு மண்டலம் தொடர்ந்து தலைமை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் நடவடிக்கைகளை முழுமையாகக் கணினிமயமாக்குதல், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை இணையக் குற்றத் தடுப்புப் பாதுகாப்பு தளங்களுடன் இணைத்தல், கடலோரப் பாதுகாப்பை அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் பலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அனைத்து மாநிலங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307471®=3&lang=1
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2307602)
வருகையாளர் எண்ணிக்கை : 14