உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பனாஜியில் செப்டம்பர் 7 அன்று மேற்கு மண்டலக் குழுக் கூட்டம் - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகிக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 3:27PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, கோவாவின் தலைநகரான பனாஜியில், நாளை மறுநாள் (2026 செப்டம்பர் 7, திங்கட்கிழமை) நடைபெறும் மேற்கு மண்டலக் குழுவின் 28-வது கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார். மேற்கு மண்டலக் குழுவானது கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையும், தாத்ரா - நாகர் ஹவேலி, டாமன் - டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது. மேற்கு மண்டலக் குழு உட்பட ஐந்து மண்டலக் குழுக்கள், 1956-ம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் 15 முதல் 22 வரையிலான பிரிவுகளின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மேற்கு மண்டலக் குழுவின் தலைவராகவும், கோவா முதலமைச்சர் அதன் துணைத் தலைவராகவும் உள்ளனர். உறுப்பு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார். இந்தக் கூட்டத்தை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கிடையேயான செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தை கோவா அரசு நடத்துகிறது. இந்த மண்டலக் குழுவில் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சரும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

மாநிலங்களால் முன்மொழியப்படும் பிரச்சனைகள், விவாதத்திற்காக முதலில் மண்டல மன்றத்தின் நிலைக் குழுவின் முன் வைக்கப்படுகின்றன. ஆலோசனைக்குப் பிறகு, தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகள் பரிசீலனைக்காக மண்டல குழுக் கூட்டத்தின் முன் வைக்கப்படுகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவு கூட்டாட்சிக் கொள்கையின் அடிப்படையில், மண்டலக் குழுக்கள் ஒரு முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றன. வலிமையான மாநிலங்கள் வலிமையான தேசத்தை உருவாக்குகின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையில், மண்டலக் குழுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து உரையாடுவதற்கும் கலந்துரையாடுவதற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகின்றன. மேலும், இந்தச் செயல்முறையின் மூலம் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இக்கூட்டங்கள் செயல்படுகின்றன.

உணவுப் பாதுகாப்புத் தரங்கள் தொடர்பான பிரச்சனைகள், ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம், மின்சாரத் துறை சீர்திருத்தங்கள், நகர்ப்புறத் திட்டமிடல், கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்துதல், இணையக் குற்றம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பரந்த பிரச்சனைகளையும் இந்தக் குழுக்கள் விவாதிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306926&reg=3&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307012) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada