சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தோ – ஜெர்மன் சுற்றுச்சூழல் மன்றத்தின் 4-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 2:05PM by PIB Chennai

இந்தோ ஜெர்மன் சுற்றுச்சூழல் மன்றத்தின் 4-வது கூட்டம் புதுதில்லியில் 2026 செப்டம்பர் 1 அன்று நடைபெற உள்ளது. பெரும் மீள்திறனுக்காக ஒன்றிணைதல் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவும், ஜெர்மனியின் சுற்றுச்சூழல், பருவநிலை பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு காஸ்டன் ஸ்னைடரும் இணைந்து தலைமை தாங்க உள்ளனர்.

இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவும், மேம்பட்ட நடைமுறை கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலைக் கொள்கை குறித்த விவகாரங்கள் தொடர்பாக திரு யாதவும், திரு ஸ்னைடனும் விவாதிக்க உள்ளனர்.

குறைந்த அளவு கார்பன் வெளியேற்றம் சார்ந்த தொழில்கள், சதுப்பு நிலங்கள், மலைகள், காடுகள் ஆகியவற்றில் பல்லுயிர் பெருக்கம், வளப் பயன்பாட்டுத்திறன், வர்த்தக ரீதியிலான சுழற்சிப் பொருளாதாரம், நீடித்த நிதி வழங்கல், பசுமைத் திறன்கள், முதலீட்டைத் திரட்டுதல் ஆகிய துறைகளில் உள்ள சவால்கள், தீர்வுகள், வாய்ப்புகள் குறித்து இந்த மன்றக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.

சுற்றுச்சூழல், பருவநிலை தொடர்பான ஒத்துழைப்பு குறித்து, கொள்கை வகுப்பாளர்கள், தனியார்துறை பிரதிநிதிகள், சிந்தனைக் குழுவினர், இதர முக்கிய பங்குதாரர்களிடையே இருதரப்பு கருத்துப் பரிமாற்றத்திற்கான தளத்தை இந்த மன்றக் கூட்டம் ஏற்படுத்தித் தரும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304917&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2305017) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR