உரங்கள் துறை
ஒருங்கிணைந்த உர மேலாண்மை அமைப்பு தரவு சார்ந்த புதிய கட்டத்திற்குள் நுழைகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 4:21PM by PIB Chennai
இந்தியாவில் உர மேலாண்மையின் டிஜிட்டல் முதுகெலும்பாகத் திகழும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை அமைப்பானது, வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துதல், உரங்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் உர விநியோகச் சங்கிலியைத் தரவுகள் அடிப்படையில் திறம்படக் கண்காணித்தல் ஆகிய நோக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான டிஜிட்டல் முன்முயற்சிகள் மூலம் தற்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
மத்திய உரங்கள் துறைக்காக தேசியத் தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுத் தொழில்நுட்ப ஆதரவு அளிக்கப்படும் ஐஎஃப்எம்எஸ், உர உற்பத்தி, இறக்குமதி, சரக்குப் போக்குவரத்து, கையிருப்பு, சில்லறை விற்பனை மற்றும் மானியச் செயலாக்கம் உள்ளிட்ட உரச் சூழலியலின் அனைத்து முக்கிய நிலைகளையும் ஒருங்கிணைக்கிறது. தேசிய அளவில் செயல்படும் இந்த அமைப்பு, 14 கோடிக்கும் அதிகமான ஆதார் இணைக்கப்பட்ட உரக் கொள்முதல் செய்வோரையும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களையும், ஆண்டுதோறும் சுமார் 7 கோடி மெட்ரிக் டன் அளவிலான உர விற்பனைப் பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான உர மானிய விநியோக நிர்வாகத்திற்கும் இது உறுதுணையாக விளங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளில், உரப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதையும் தாண்டி, ஐஎஃப்எம்எஸ் கட்டமைப்பை ஒரு ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் முடிவெடுக்கும் தளமாக மேம்படுத்துவதில் மத்திய உரங்கள் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
உர உற்பத்தி, இறக்குமதி, அனுப்புதல், கையிருப்பு மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலவரத்தை அதிகாரிகள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் புதிய தகவல் பலகைகளும் பகுப்பாய்வுக் கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் சில்லறை விற்பனையாளர் நிலைகளில் தொடர் கண்காணிப்பைச் சாத்தியமாக்குவதோடு, விநியோகத்தில் ஏற்படும் அசாதாரணப் போக்குகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகின்றன. இதனால், ஐஎஃப்எம்எஸ் மூலம் கிடைக்கும் பெருமளவிலான பரிவர்த்தனைத் தகவல்கள், நுகர்வு முறைகளைக் கண்டறிவதற்கும், தரவுகள் அடிப்படையில் துல்லியமான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கும் பெரிதும் பயன்படுகின்றன.
இந்தப் பரிணாம வளர்ச்சியானது, விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், நாட்டின் மிக முக்கியமான வேளாண் உள்ளீடுகளில் ஒன்றான உர விநியோகத்தை முழுமையான தகவல்களுடன் நிர்வகிப்பதற்கும் நம்பகமான டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304690®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304748)
வருகையாளர் எண்ணிக்கை : 6