குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கேரள கௌமுதி நாளிதழின் 115-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2026 12:45PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (30.08.2026) ஆலப்புழாவில் நடைபெற்ற கேரள கௌமுதி நாளிதழின் 115-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நாளிதழின் 115 ஆண்டுகாலப் பயணமானது, நம்பிக்கை, துணிவு, கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஓர் சான்றாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

1911-ம் ஆண்டு திரு சி வி குஞ்சிராமனால் நிறுவப்பட்ட கேரள கௌமுதியின் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், சமூக விழிப்புணர்வுக்கும், விளிம்புநிலை மக்களின் குரலை உயர்த்துவதற்கும் இந்தப் பத்திரிகை குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளது என்று கூறினார்.

செய்தித் துறையானது, அச்சு ஊடகத்திலிருந்து தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு எனப் பல பிரிவுகளுக்கு விரிவடைந்துள்ள போதிலும், நம்பகமான தகவல்களும் தார்மீக நெறிகளுமே இவற்றின் முதன்மையானவையாகத் திகழ்கின்றன என்று அவர் கூறினார். துல்லியம், நேர்மை, சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம் பெறப்படும் மக்கள் நம்பிக்கையே ஒரு செய்தித்தாளுக்கு மிகப்பெரிய சொத்து என்றும் அவர் கூறினார்.

ஆக்கப்பூர்வமான இதழியலுக்கு அழைப்பு விடுத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், புத்தாக்கம், அறிவியல் சாதனைகள், கருணை, சமூக சேவை, நேர்மறையான சமூக மாற்றம் ஆகியவற்றை ஊடகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் சமூகத்திற்கு அறிவையும் தகவல்களையும் பரப்பி, நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்கி மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கேரள கௌமுதி நாளிதழ், இதழியலின் அடித்தளங்களான உண்மை, நம்பகத்தன்மை, மக்கள் நம்பிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, மலையாள இதழியலின் வலுவான குரலாகத் திகழும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு ரோஜி எம் ஜான், கேரள கௌமுதியின் முதன்மை ஆசிரியர் திரு தீபு ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304635&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304670) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam